பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/138

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தருகின்றன. மரங்கள் மழையைத் தருகின்றன. இந்தப் புவிக் கோளத்தில் உயிர்ப்புக் காற்று பிராணவாயுவின் அளவுக்கு அடங்கியதாக கரியமில வாயு இருக்க வேண்டும். கரிய மிலவாயு, பிராணவாயுவை விடக் கூடுதலாகிவிட்டால் சுற்றுப்புறச் சூழ்நிலை பாதிக்கிறது. இதனால் மழை பெய்யாது. இன்று என்ன நிகழ்கிறது? நமது நாட்டின் சுற்றுப் புறச் சூழ்நிலையில் காடுகள் அழிக்கப் பெற்றதாலும் மரங்கள் வெட்டப்பட்டதாலும் பிராணவாயுவுக்குத் தட்டுப்பாடு! அதுமட்டுமா? ஆலைகள், தொழிற்சாலைகளிலிருந்து வெளி வரும் புகை முதலியனவும் கரியமில வாயுவின் அளவைக் கூட்டியுள்ளன. இதனால் பெய்யும் மழையின் அளவு குறைந்து வருகிறது. பெய்யும் மழையும் முறையாகப் பெய்வதில்லை. நீண்ட இடைவெளிகளுக்குப் பிறகு பெய்கிறது. அல்லது புயலாக, வெள்ளமாக அமைந்து விடுகிறது. இவற்றையெல்லாம் சீரமைக்க வேண்டும் எனில் மரம் வளர்க்கும் பணியில் அனைவரும் ஈடுபடவேண்டும். வீட்டுக்கு ஒரு மரம் போதாது. நபருக்கு ஒரு மரம் திட்டமிட்டு வளர்க்கவேண்டும். ஊராட்சிகள் வீதி ஓரங்களில் மரங்கள் நடுவதன்மூலம் ஊருக்கு அழகுதரலாம். மக்களுக்குத் தூசி இல்லாத தூய்மையான காற்றுக் கிடைக்கும். பள்ளிகள் எல்லாம் பசுஞ்சோலையாக மாறவேண்டும். நிலமகள் நிர்வாணமாக இல்லாமல் பசுஞ்சோலையை ஆடையாக அணியும் நாளிலேயே, நமது நாடு நாடாவளம் உள்ள நாடாக வளரும்.

நீர் நிர்வாகம்

“நீரின்றமையாது உலகு” - என்றார் திருவள்ளுவர். தண்ணிருக்கு மூலம் மழையே! இதனைத் திருவள்ளுவர் “வானின்றமையாது ஒழுக்கு” என்று கூறுகிறார். ஆதலால், தண்ணீருக்கு மூலமாக உள்ள மழையைப் போதிய அளவு பெறும் முயற்சி தேவை. பெய்யும் மழைத் தண்ணீரைத் தேக்கி வைத்துப் பயன்படுத்தும் நீர் மேலாண்மை தேவை. பூமியில்