பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/142

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பொருள்களை அழியாமல் பாதுகாக்க வேதியியல் அறிவியல் பயன்படுகிறது. நமது நாட்டில் ஆண்டு ஒன்றுக்கு ஏறத்தாழ ரூபாய் 10,000 கோடி மதிப்புள்ள பொருள்கள் அழிந்து வருகின்றன. இந்த அழிவிலிருந்து நாட்டைக் காக்க வேதியியல் அறிவியல் துறை துணை செய்யும். உலோகப் பொருள்கள், குறிப்பாக இரும்பு அரிமானத்திற்கு ஆளாகாமல் தடுக்கும் முறை உள்ளது. அதுபோலவே அதிவேகக் கடத்திகள் பற்றிய ஆய்வு முடிவுகள். மின் தடைகள் அளவு குறைகின்றன. இயந்திரங்களை வேகமாக இயக்குவதால் காலமும் ஆற்றலும் மிச்சப்படுகின்றன.

பொருளியல்

மனித வாழ்க்கையின் இன்றியமையாத் தேவை பொருள். “பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்பது திருக்குறள். திருக்குறள் குறிப்பிடும் பொருள், மனித வாழ்வின் இயக்கத்திற்கு இன்றியமையாத் தேவையாகிய உண்பனவும் தின்பனவும் உடுத்துவனவும் ஆகிய பண்டங்களே. உண்மையில் இவையே பொருள்கள். இந்தப் பொருள்களில் சில இயற்கையில் தோன்றுவன. மற்றபடி பெரும்பாலும் மனத முயற்சியில் உற்பத்திச் செய்யப் படுவனவே பொருள்கள். மனிதனின் நுகர்வுக்குரியன தரும் தொழில்களே விவசாயம், கால்நடை வளர்ப்பு, தொழிற்சாலைகள் முதலியன. மனிதனின் வாழ்க்கை முழுதும் பொருளைச் சுற்றியே வட்டமிடுகின்றது. மனிதனின் அகநிலை, புறநிலைப் பண்புகள் கூடப் பொருளைச் சார்ந்தவையேயாம். பொருட் சார்பிலேதான் சமய நெறிகளும்கூட ஆக்கம் பெறுகின்றன.

உடல் நல்ல வண்ணம் வளர வேண்டும். பாதுகாக்கப் பெறுதல் வேண்டும். உயிர் உடலைச் சார்ந்துதான் வாழ்கிறது. உடலும் உயிரும் ஒன்றையொன்று தழுவியன. நல்ல உடலில் நல்ல ஆன்மா! நல்ல ஆன்மாவினிடத்தில் நல்ல மனம்! ஆதலால், உடல், உடலியல் உடலியக்கத்திற்குத் தேவையான