பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/147

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

135


இல்லாமல் கோதுமை மற்றும் தானிய வகைகளையும் சுழற்சிமுறையில் சேர்த்துக் கொள்வது நல்லது. அதுபோலவே, பருப்பு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

உடம்பு, உழைப்புக்கு உரிய சாதனம். பயன்படுத்தப் பெறாத உடம்பு நோய்க்கு இரையாதல் இயற்கை கதிரொளியில் தோய்தலும் காற்றில் தோய்தலும் உடலுக்கு நலம் தரும்; ஆற்றல் கூட்டும்; ஆயுளை வளர்க்கும்.

எல்லாவற்றிற்கும் மேலாக உடல் நலத்திற்கு ஆன்ம நலம் தேவை. ஆன்ம நலத்தினை அரண் செய்ய உடல் நலம் தேவை. ஆன்ம நலத்தின் விளைவு மன நலம். மன நலத்திற்கு அரண் நல்ல சமுதாய அமைப்பும் அறிவின் தெளிவும் ஆகும்.

சமூகவியல்

மனிதன் ஒரு சமூகப் பிராணி, மனிதன் கூடி வாழப் பிறந்தவன். மனிதன் குடும்பம், சமூகம், சமுதாயம், தேசிய இனம் என்ற பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து இணைந்து ஒன்றுபட்டு வாழப்பிறந்தவன். ஆனால் நடைமுறையில் மனிதன் தோன்றிய காலந்தொட்டு நடைபெறவில்லை. நன்மையும் பலனும் இருக்கிறவரையில் சேர்ந்திருக்கிறான். அது கிடைக்காது என்றவுடன் பிரிந்து பகை கொள்கிறான் மோதுகிறான். அன்பு, நன்றி என்ற சொற்கள் அகராதியில் மட்டும் உள்ள. சொற்களாக மாறிவிட்டன. ஏன்? அரசியல் விஞ்ஞானமே மனித உறவுகளின் எல்லைகளை நிர்ணயித்து மோதல்களைத் தவிர்த்து மனித குலத்தை ஒன்றுபட்டு நின்று. வளரவும் வாழவும் தான் தோன்றியது. இன்று அந்த அறிவியல் சார்ந்த அரசியலை எங்கே காணமுடிகிறது? அரசியல் கட்சிகள் இன்று இழிநிலைக்கு வந்து விட்டன. அரசியல் கட்சிகள் சமுதாயத்தை உடைத்திருப்பதுபோல வேறு எதுவும் உடைக்கவில்லை. கட்சிகள் - அவரவர் கட்சிகள் என்ற சிற்றெல்லைக்குள்ளேயே விளையாடுகின்றன. அவற்றுக்குள்ளே உட் குழுக்கள் எண்ணற்றவை. திருக்குறள்