பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் எனும் அறிவுலக ஞானி


க.ப. அறவாணன்

முன்னைத் துணைவேந்தர்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்

"நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்” என வீர பாசுரம்பாடி, பல்லவ மன்னன் அளித்த மரண வாயிலிலிருந்து மீண்டு. தோளில் உழவாரப் படையைச் சுமந்து தம் திருவடிகள் வலிக்க வலிக்க நடந்து மனம் சோராமல் சிவத்தொண்டு ஆற்றிப், புத்தனைப்போல் எண்பது ஆண்டுகளுக்குமேல் தொண்டு செய்து, திருமணம் முடிக்காமல் வாழ்ந்து, கி.பி. 7-ஆம் நூற்றாண்டு அளவில் உலகவாழ்விலிருந்து விடைபெற்ற திருநாவுக்கரசு எனும் அப்பரை நாம் நம் விழிகளால் ஆரக்கண்டு தரிசித்ததில்லை. கைகளைக் கூப்பி வணங்கியதும் இல்லை. அவரோடு இனிய தமிழில் உரையாடியதும் இல்லை. அவர் தேவார திருப்பாசுரங்களைத் திருக்கோயில்முன் வரகவியாக நின்று பாடியபோது நாம் நேரில் செவிமடுத்ததுவு மில்லை.

கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் அப்பர் அடிகளோடு கலந்து வாழும் வாழ்வுப்பேற்றைப் பெறாத நாம், நம் காலத்திலேயே இருபதாம் நூற்றாண்டு அப்பரை நேரில் காணமுடிந்தது. கண்களால் தரிசிக்க முடிந்தது; கைகளால் வணங்க முடிந்தது; செவியார அவர் பொழிவுகளைச் செவிமடுக்கவும் முடிந்தது. அவர் திருமுன் அமர்ந்து சமய, சமுதாய, அரசியல் சிக்கல்கள் பற்றிக் கலந்து உரையாடவும் முடிந்தது. அந்த 20-ஆம் நூற்றாண்டு அப்பர் அடிகளார்தாம்; பெருவாழ்வும், திருவாழ்வும் வாழ்ந்து சமயத்திற்கும், சமுதாயத்திற்கும் அரும்பெரும் தொண்டாற்றி நம்மைவிட்டு மறைந்த குன்றக்குடி அடிகளார் ஆவர்.

கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் 80வயதில் முக்திஅடைந்த கெளதம புத்தர்தம் வாழ்க்கை அவர் பிறந்த வடஇந்தியாவில் மட்டுமன்றி, தென்னிந்தியா, இலங்கை, தாய்லாந்து, சீனா, ஜப்பான் முதலான தென்கிழக்கு ஆசியநாடுகளில் அவரின் அறிவுரைகள் பரவியதுடன் மட்டுமன்றி ஐரோப்பிய அறிஞர்களையும் ஈர்த்தது. ஐரோப்பிய அறிஞர்கள் புத்தரைப்பற்றி எழுதிய நூல்கள் புகழ்பெற்றவை. புத்தருக்குப் பிறகு அவர்தம் வாழ்நாளிலேயே அமைத்துப் போற்றிய சங்கமும் புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி அவரை மெய்யாக நேசித்த ஆனந்தர் முதலான சீடர்கள் உலகுமுழுதும் புத்த சைத்தியங்கள், விகாரங்கள் என்ற மடங்களும் தொடர்ந்து பரவின. இம்மடங்களின் வழி முற்றும் துறந்த புத்த