பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

பிட்சுக்கள் புத்தர்தம் கருத்துக்களைப் பரவச்செய்தனர். திட்டமிட்ட பல்வேறு ஒழுங்குகளை உடையதாகப் புத்தமடங்கள் தொடக்கத்தில் செயல்பட்டன. புத்தசமயம் நிறுவன சமயம் (lnstitutional Religion) ஆயிற்ற, புத்தத் துறவிகள் மக்களை நெறிப்படுத்துவதில் முன்னிடம் பெற்றிருந்தனர். மணிமேகலையில் இடம்பெற்றுள்ள அறவண அடிகள் இதற்குத் தகுந்த சான்று ஆவார். காவி உடை மண்ணாலான பிச்சை ஒடு ஆகிய சில மட்டுமே புத்தத் துறவிகளின் சொந்தப் பொருள்கள். மக்களோடு மக்களாக அவர்கள் வாழ்ந்து வந்தனர். அதனால்தான் புத்தசமயம் கடல்கடந்தும் பரவிற்று. அறிவார்ந்த மக்களான தாய்லாந்தினர், சீனர், ஜப்பானியர் ஆகியோராலும் பின்பற்றப்பட்டது.

(பெளத்த சமயம் பரவிய இம்முப்பெருநாடுகள் மட்டுமே கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியக் கால்னி ஆதிக்கத்திற்கு ஆளாகாத நாடுகளாக வரலாற்றில் நின்றன).

புத்த சமயத்தைப்போல, சைவ சமயத்தைச் சமயநிறுவனம் ஆக்க நடந்த முயற்சியே சைவமடங்கள் பல உருவாகக் காரணம் ஆயிற்று. பல்லவர் காலம் தொடங்கித் தமிழ்நாட்டை ஆண்டுவந்த அரசர்களும், செல்வர்களும் தம் நிலங்களையும் உடமைகளையும் கொடையாக வழங்கி வந்தனர். இம்மடங்கள்வழித் தமிழும், சைவமும், அறங்களும் போற்றிப் புரக்கப்பட வேண்டும் என்பது அவர்தம் கருத்தாக இருந்தது. அவை, தொண்டகங்களாக (Missions) இருக்கவேண்டும் என்பது அவர்தம் கனவு. ஆனால், முன்னோர்தம் கனவு நனவாகவில்லை; தொடர்ந்து நிலை பெறவுமில்லை. தமிழ், சமயம், அறம் என்ற மூன்றின் வழியாகப் பொதுமக்களோடு பிணைந்திருக்கவேண்டிய தொடர்பு கிட்டத்தட்ட அறுந்து போயிற்று. சில இடங்களில் மட்டும் தமிழ்க் கல்லூரிகளாக மெலிந்து செயல்பட்டது. பல்வேறு சடங்கு சம்பிரதாயங்களைத் தாண்டித்தான் அபூர்வமாக மடாதிபதிகளைச் சந்திக்க வேண்டும் என்ற நிலைமை உருவாயிற்று. எளிய பொதுமக்கள் தொடர்பு கிட்டத்தட்ட அற்றுப் போயிற்று.

குன்றக்குடி அடிகளார் தாம், அதுவரை இருந்து வந்த இரும்புத் திரையை அகற்றிவிட்டு மக்களோடு மக்களாகக் கலக்கத் தொடங்கினார்; கரையத் தொடங்கினார். பட்டணப் பிரவேசம் தாண்டிப் பாமரப் பிரவேசத்தைத் தொடங்கி வைத்தார். அடிகளார்தம் கால்தடங்கள் படாத ஊரில்லை. பகுத்தறிவு உலகில் தந்தை பெரியார் செல்லாத ஊரில்லை; பக்தி உலகில் அடிகளார் செல்லாத இடம் இல்லை. மடாதிபதிகள் கடல்கடந்து செல்லலாகாது என்று கருதப்பட்ட காலத்தில் அடிகளார் கடல்தாண்டி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா என்று பயணித்தார். அவர்தம் பார்வை விசாலமாயிற்று. அறிவியல்