பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/168

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தமிழளிக்கும் தென்பாண்டி நாட்டானின் தண்ணருளை அனுபவிக்கின்றோம். குற்றாலத்தருவியில் குளித்தால் உடலின் வெப்பம் கழியும்; மாணிக்கவாசருடைய திருவாசகத் தேனருவியில் மூழ்கித் திளைத்தால் உயிரின் மல வெப்பங்கள் கழியும்; துன்பம் நீங்கும்; இன்ப அன்பு பெருகும்; விடுதலை கிடைக்கும். -

மனிதன் உணர்ச்சியின் பிண்டம் தெரிந்தோ தெரியா மலோ மனிதன் உணர்ச்சி வசப்படுகிறான். அவ்வுணர்ச்சி வெற்றியும் தரலாம்-தோல்வியும் தரலாம். அந்த உணர்ச்சிகளினின்றும் மனிதனை விடுதலை பெறச் செய்வது சற்றுக் கடினமானது. உணர்ச்சி தோன்றுவதை அடிப்படையிலேயே தடுத்துவிடுவது என்பது முடியாதது. அந்த உணர்ச்சிகளால் அவன் வாழுகிறானா? அல்லது விழுகிறானா என்பவற்றை யெல்லாம் அறிந்து அவனை ஆற்றுப்படுத்தி-ஒழுங்குபடுத்தி விட்டால் உயரிய பயனை அடையலாம். அந்த உணர்வுகளை வேறு வழிகளில் திருப்பி அவனைப் பக்குவப்படுத்துவதற்குரிய சாதனம்தான் சமயம், மனிதனின் உணர்ச்சிகளை இன்ப அன்பிலே ஈடுபடுத்தவே பக்தி, சமயம், கடவுள் எல்லாம் இருக்கின்றன.

சமய வாழ்வும், சமயத் தொடர்பும் இல்லாதவன் கரடு முரடாகவே இருப்பான். அவன் மனம் மண்பானை போன்றது. ஒரு தடவை உடைந்தால் ஒட்ட வைப்பது கடினம். சிலர் சமயச்சார்பிலே ஊறித் திளைத்தவர்கள் போலக் காணப்படுவார்கள். ஆனாலும் அவர்கள் வாழ்க்கையிலே சமயப் பண்பு-சமய அனுபவம் இருக்காது.

'கற்றாழையும் கள்ளியும் இயல்பாக முளைப்பன. அவற்றிற்கு நீரோ, எருவோ, மனித முயற்சியோ தேவையில்லை. ஆனால் களைவிளையும் நிலத்தைக் கழனியாக்கி அதிலே நெல் விளைவிக்க எருவும், நீரும் மனித முயற்சியும் தேவை. மனிதனின் பலவீன அமைப்பை மாற்றி, அவனைப் பயன்படுகின்றவனாக மாற்றியமைக்க வேண்டும். அதற்குச் சமயம் பயன்படுகிறது. பிறரை வாழ்விப்பது என் கடமை