பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/169

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயவியல் கட்டுரைகள்

157


என்ற கருத்தை வளர்ப்பது சமயத்தின் அடித்தளமான நோக்கம்.

மனிதனை நல்லாற்றுப்படுத்தும் சக்தி சொற்களுக்கு இருக்கிறது. இந்த நாட்டின்மீது பற்றும், இந்த நாட்டு மக்கள் நல்வாழ்வு பெறவேண்டுமே என்ற ஏக்கமும் உடையவர்களின் சொற்கள், வாழும் மனிதர்களின் உள்ளத்திலே புதிய தெம்பை உண்டாக்கும்.

ஆண்டாள் நாச்சியாரும், மாணிக்கவாசகரும் உணர்ச்சியில் ஊறித்திளைத்தவர்கள். 'தான் வாழ வேண்டும் - தனக்கு நல்ல கணவன் வாய்க்கப்பெற வேண்டும்' என்று ஆண்டாள் நாச்சியார் கருதினாள் என்பதை ஒத்துக் கொள்ளுவதில் தவறில்லை. ஆண்டாளின் எண்ணத்திலே தன்னலம் இருந்தது. ஆனால் அந்தத் தன்னலம் மற்றவர்களைப் பாதிப்பதாக இல்லை. மற்றவர்களை உறிஞ்சுவதாக இல்லை. தன்னலமே இருக்கக்கூடாது என்று சொல்ல முடியாது. அந்தத் தன்னலம் மற்றவர்களுக்குத் தீங்காக அமைந்துவிடக் கூடாது என்பதுதான் முக்கியம்.

நம்முடைய அரசியல் சட்டத்தின் அடிப்படை அமைப்பே எல்லாரும் எல்லா வாய்ப்பும் பெற்று வாழ வேண்டும் என்பதுதான். இத்தகு நாடு தழுவிய வாழ்க்கை யுணர்ச்சி ஆண்டாள் நாச்சியாரிடம் இருந்தது. அவர் சமுதாயத்திற்குத் தலைமை தாங்கிய அருளியல் கவிஞர்.

பாதகத்திற்கு முதற் காரணமாக இருப்பது மனம். மனிதனின் உள்ளுணர்வுகளைப் பக்குவப்படுத்திட்டால் தீமை நிகழா, தவறு செய்ய வேண்டும் என்ற உணர்விலிருந்தே மனிதனை விடுதலைப் பெறச் செய்ய வேண்டும்.

நமது திருக்கோவில்கள் அங்கு வருகிறவர்களின் மனப்புண்களைக் கணக்கில் எடுத்துப் பார்த்து அவர்களைப் பக்குவப்படுத்தும் பண்ணைகளாக விளங்க வேண்டும். உயிர்களைப் பக்குவப்படுத்தும் பண்பாட்டு நிலையங்கள்