பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

அறிஞர்களுடன் கைகுலுக்கினார். அரசியல் மேடைகளிலும் அமர்ந்தார். பகுத்தறிவாளருக்கும் திருநீற்றை வழங்கினார். தமிழ்நாட்டு மூடக்கூடாரங்களில் அடர்ந்திருந்த களைகளையும், புல் பூண்டுகளையும், அழுக்குகளையும் அகற்ற மீண்டும் ஓர் அப்பராக அறிவாரத்தை நெஞ்சில் சுமந்தார்.

இவற்றில் சரியான சான்றாகவே, பேராசிரியர் மெய்யப்பரின் நெறித்தடத்தில் இயங்கும் மணிவாசகர் பதிப்பகம் அடிகளார்தம் எழுத்துக்களையும், எண்ணற்ற பேருரைகளையும் தொகுதி, தொகுதியாக வெளியிடுகிறது. இப்பதினைந்தாம் தொகுதியில் அடிகளார்தம் கல்விச் சிந்தனைகளும், சமயச் சிந்தனைகளும், பிற பொதுஇயல் சிந்தனைகளும் இடம் பெற்று அழகூட்டுகின்றன.

முதலாவதாக, இடம்பெற்றுள்ள அடிகளார்தம் கல்வியியல் கட்டுரைகள் அவர்தம் புதிய சிந்தனைகளையும், தெளிந்த சிந்தனைகளையும் பதிவு செய்துள்ளன. தேர்வுக்கு இளைஞர்களை ஆயத்தப்படுத்தும் வினாவிடைகளை மனப்பாடம் செய்யும் கல்வி நாட்டிற்கும், சமூகத்திற்கும் பயன்தராது (ப. 23) அறிவுச் சேதம் ஏற்படக்கூடிய அளவிற்குக் குறைந்த மதிப்பெண்களில் தேர்ச்சி அளித்தல், இலவச மதிப்பெண்களை அளித்துத் தேர்ச்சி அளித்தல் ஆகியன கல்வியின் தரத்தைக் குறைக்கும். வருங்கால மானுட வரலாற்றையே பாழாக்கும். ப. 24).

கல்லூரி,பல்கலைக்கழகப்பட்டக்கல்வியைவிட நம்நாட்டின் முதல் தேவை சிற்றுர்ப்புறத் தொடக்கக் கல்விதான். இதனைக் கவனிக்காமல் உயர்நிலைக் கல்விக்கு மிகுந்த முதலீடு செய்கிறோம். அதாவது, அடிப்படையைக் கவனிக்காமல் மேல்நிலைக் கட்டடங்களைக் கட்டமுயற்சி செய்கிறோம் (ப. 24). எத்தகைய கல்வி வழங்கவேண்டும்? கல்வி என்பது தெரியாததைத் தெரியச் செய்வது மட்டுமன்று கற்றலுடன் வாழ்ந்திடவும், ஒழுக்கத்தில் நின்று ஒழுகச் செய்திடலும் ஆகும். கல்வி ஏட்டுக் கல்வியாக மட்டும் அமைந்துவிடக் கூடாது. செய்முறைக் கல்வியும் அவசியம். உழைப்புக் கல்வியும் கூடத் தேவை (ப. 26). தாய்மொழிவழிதான் கல்வி வழங்கவேண்டும். ஆங்கிலத்திற்கு அளவிற்கு மீறிய முக்கியத்துவம் தருவதன் காரணமாகச் சிந்தனையும், அறிவும் பாதிக்கப்படுகின்றன (ப.29). மாணாக்கனின் அகத்தில் உறங்கிக் கிடக்கும் ஆற்றலை. ஒளியை வெளிக்கொணர்தலே கல்வி. ஆசிரியர் ஒருதுணை நூல்கள். கருவிகள் ஆகும். எக்காரணத்தை முன்னிட்டும் ஆசிரியரே மாணாக்கர்களுக்கு விடைகளைக் கற்றுக் கொடுத்துவிடக் கூடாது. மாணாக்கர்களே முயன்று சரியான விடைகளைக் காணத்தூண்ட வேண்டும் (ப. 42). மாணாக்கர்களின் வயது, பருவம்