பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/170

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


திருக்கோயில்கள். மனிதர்களை அவ்வாறு பக்குவப்படுத்தும் தகுதியும், திறமையும் உடையவர்களே மதப்பிரச்சாரகர்களாக வரத் தகுதியுடையவர்கள், பொதுவாக மனித தர்மத்திற்குப் பணியும் பண்பும் நம் மக்களிடையே வளரவேண்டும்.

நம்முடைய உணர்வில் அன்பை-அறத்தை-உடன் பிறப்பு உணர்வைக் கொப்பளிக்கச் செய்யும் சக்திவாய்ந்தது ஆண்டாளின் திருப்பாவை. ஆண்டாளிடத்தில் நல்ல உணர்வு இருக்கிறது-திருவருள் சிந்தனை இருக்கிறது-நல்ல தமிழ் இருக்கிறது. இவற்றை வைத்துப் பாவை பாடினார் ஆண்டாள் நாச்சியார்.

இரும்பை நெருப்பில் போட்டுச் சூடாக்கிச் சம்மட்டியால் அடித்தால்தான் அது வில்லாக வளையும். அது போல மனிதனை நோன்பிலே வருத்திப் பக்குவப்படுத்தினால்தான் அவன் பயன்படும் மனிதனாவான்.

ஆண்டாள் நாச்சியார் வீட்டைச் செழிப்படையச் செய்ய வேண்டுமென விரும்பினார். அதன் வழியே நாட்டையும் செழிப்படையச் செய்ய வேண்டுமென விரும்பினார். ஆண்டாள் நாச்சியார் கண்ணனையே வழிபட்டார். கண்ணனிடத்தில் காதல் கொண்டார். கண்ணனின் முதுகிலே ஒரு ஈ, கொசு உட்கார்ந்தால் கூடப் படபடத்தார். அத்தகைய தூய பக்தி நமக்கு வேண்டும்.

செய்யக்கூடாதனவற்றைச் செய்யக் கூடாது; தீக்குறளைச் சென்றோதக் கூடாது; முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்ற தலையாய மூன்று ஒழுக்கங்களை ஆண்டாள் நாச்சியார் வலியுறுத்துகிறார்.

கிறித்தவர்கள் முதலியோரின் சமயப் பிரச்சாரத்திற்கு மையமாகத் "தொண்டு" அமைந்திருக்கிறது. நம்மவர்களின் சமயப் பிரச்சாரத்திற்குப் பெரும்பாலும் பேச்சுதான் மையமாக அமைந்திருக்கிறது. எனவே நம்மில் 70 விழுக்காடு தோல்வியடைகிறோம்.