பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/182

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உளன் என உணர்தல் அறிவின் இயல்பு. இவ்வுலகின் நடப்பில் காணப்படும் ஒவ்வோர் ஒழுங்கும் முறை பிறழா நிகழ்ச்சியும் முதல்வனது அமைப்பன்றோ ! இதனை மணிவாசகப் பெருமானது,

"... நாடொறும்
அருக்கனிற் சோதி அமைத்தோன் திருத்தகு
மதியில் தண்மை வைத்தோன் திண்திறல்
தீயின் வெம்மை செய்தோன் பொய்தீர்
வானிற் கலப்பு வைத்தோன் மேதகு
காவின் ஊக்கம் கண்டோன் நிழல்திகழ்
நீரில் இன்சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட
மண்ணில் திண்மை வைத்தோன் என்றென்று
எனைப்பல கோடி எனைப்பல பிறவும்
அனைத்தனைத் தவ்வயின் அடைத்தோன்.”

என வரும் அருள்மொழிகள் விளக்குகின்றன "சிசிரோ” என்ற உரோம அரசியல் ஞானி, "பொருள்களின் இயற்கை யமைப்பில், மனிதனது மனத்தின் அப்பாற்பட்டதும் ஆராயும் அறிவு புக முடியாததும் ஆகிய ஒர் இயல்பு இருக்கிறது. இத்தகைய இயல்பை ஆக்கித் தருவது மனிதனை விட மேம்பட்டதாதலின் கடவுளைத் தவிர அது வேறு எதுவாக இருக்க முடியும்?” என்று கடவுளுண்மையை மிக அழகாகச் சுட்டிக் காட்டுகின்றார். முத்தொழிற் படுகின்ற இவ்வுலகு காணப்படுகின்ற அறிவற்ற பொருள். எனவே, தானாக முத்தொழிலிற்பட இயலாது. ஆதலின் உலத்தைத் தொழிற்படுத்துகின்ற தலைவன் ஒருவன் உண்டு. ஆதலால்தான் மெய்கண்ட தேவர் முதலிய பெருமக்கள், "காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுளைக் காண்க” என்று ஆணையிட்டனர்.

"அவன் அவள் அதுவெனும் அவை மூவினைமையின்
தோற்றிய திதியே ஒடுங்கிய மலத்துளதாம்
அந்தம் ஆதி என்மனார் புலவர்"