பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/185

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயவியல் கட்டுரைகள்

173


புதல்வர்களைத் திருக்கோயில் வலஞ்செய்து வரச் செய்கின்ற பழக்கம் அக்காலத்தில் இருந்திருக்கிறது. தலைவி தனது மகனைச் சேடியோடு கடவுட் கடிநகர் வலஞ்செய்து வர அனுப்பிய செய்தியைக் "கடவுட் கடிநகர்தோறு மிவனை வலங்கொளீஇ வாவெனச் சென்றாய்" என்று மருதக்கலி எடுத்துரைக்கிறது. யாருக்கும் வணங்காத மன்னன் முழுமுதற் பொருளாம் சிவனுக்கே வணங்கும் இயல்பினன்.

செந்தண்மை பூண்டொழுகும் கடப்பாட்டினராய், நான்மறை ஓதி வாழ்த்தியல் வழங்கு அந்தணர்கள் முன்பு வணங்காமுடி வணங்கட்டும் என்று கூறுகின்றார்.

"பணியிய ரத்தைநின் குடையே
முனிவர் முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே"

என்பது காரிகிழாரின் வாய்மொழி, சங்க கால மக்களது வாழ்க்கையில் இயல்பிலேயே சமய வாழ்வு அமைந்திருந்தது. வாழ்க்கை வேறு, சமயம் வேறு என்று பகுத்துக்காணும் பொய்மைப் பண்பு பிற்காலத்தைச் சேர்ந்தது. இப்பாடல் தமிழினத்தார் மிகப் பழைய காலத்திலேயே சிவநெறிப் பற்றில் சிறந்து விளங்கி அகன்ற, பெரிய, பரந்த திருக் கோயில்கள் எடுத்து வலஞ்செய்து வாழ்த்தி வணங்கினர் என்பதையும், மெய்யுணர்வு பற்றிய அருமறை நூல்கள் விளங்கி இருந்தன என்பதையும் அருள்நெறி விளக்கஞ் செய்யும் அருளாளர்கள் பலர் வாழ்ந்தனர் என்பதையும் விளக்கி நிற்கின்றது.

6. எது உயர்ந்தது

இன்றைய உலகில் மக்களாட்சி வேட்கை எல்லோரிடத்திலும் இருக்கிறது. உலகில் பெரும்பாலான இடங்களிலும் மக்களாட்சியே நடைபெற்று வருகிறது. மக்களாட்சியில் மக்களுக்குள் உயர்வு தாழ்வு இருக்காது.