பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/189

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயவியல் கட்டுரைகள்

177



"யாஅ மிர்ப்பவை பொருளும் பொன்னும் போகமும்
அல்ல நின்பால்
அருளும் அன்பும் அறனும் மூன்றும்.
உருளினர் கடம்பின் ஒலிதாரோயே"

என்று பரிபாடல் விளக்குகிறது. "உன்தன் வார் கழற்கு அன்பு எனக்கு நிரந்தரமாய் அருளாய் நின்னை ஏத்த முழுவதுமே” என்பது மணிவாசகர் மணி மொழி. அருளின்றி அன்பில்லை; அன்பின்றி அருளில்லை. இவ்விரண்டு மின்றி அறம் இல்லை. எனவே, அருளும் அன்பும் கொண்டு அறம் பல செய்து வாழ முயல்வோமாக!

8. வள்ளுவரும் வாதவூரரும்

"ஒன்றென்றிரு தெய்வ முண்டென்றிரு" என்ற உண்மையை உள்ளவாறு உணர்த்தியது நமது தமிழ் நாடே யாகும்.

“தெய்வந் தெளிமின்,தெளிந்தோர்ப் பேணுமின்” என்று எடுத்துச் சொல்லிய நாடு நம் தமிழகமே யாகும். நேற்றைய பாரதியார்கூடப் "பரிபூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்” என்று பறைசாற்றினார். தமிழர்களின் கலைக் களஞ்சியங்களிலே, படித்தவர் போற்றும் பத்துப்பாட்டிலே, புலவர்கள் போற்றும் புறநானூற்றிலே கற்றோர் ஏத்தும் கலித்தொகையிலே, அறிஞர்கள் போற்றும் அகநானூற்றிலே, பண்புடையோர் போற்றும் பரிபாடலிலே, குவலயத்தார் கொண்டாடும் குறந்தொகையிலே, கடவுள் மணமும் சிவம் எனும் தேனும் தேங்கிநின்று ஆரா இன்பத்தைத் தருகின்றது. இத்தகைய தெய்வத் தமிழ் நாட்டிலே பிறந்த தலைசிறந்த உலக கவிகள்தான் நமது வள்ளுவரும் வாதவூரரும். அவர்கள் நிறைமொழி மாந்தர்கள். அவர்கள் வாய்மொழி மறை