பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

பட்டினி கிடப்போர் ஐம்பதுகோடி
பிணிவாய்ப் பட்டோர் நூற்றைம்பது கோடி
பஞ்சத்தில் தவிப்போர் நூறுகோடி
வேலைவாய்ப்பு இல்லாதோர் ஐம்பதுகோடி
எழுத்தறிவில்லாதோர் 81.4 கோடி

இத்தகு அவல நிலையில் 'தலைவிதி தத்துவம் கடவுளின் சித்தம்’ பற்றிப் பேசித் திசை திருப்புகின்றனர். சமதர்ம சமுதாய அமைப்புக்குப் போராடுபவர்களை நாத்திகர் என்று வசைபாடுகின்றனர் (ப. 212).

நான் ஏன் சோஷலிஸ்டு (ப. 218) தமிழ் நெறியும் லெனினியமும் (ப. 222) எனும் தலைப்புகளில் பொதுவுடைமைச் சித்தாந்தத்தை அலசுகிறார்.

பொதுவியல் கட்டுரைகள் எனும் தலைப்பில் தமிழ், அதன் மேன்மை, தமிழிசையின் பெருமை, வடஎல்லையாகிய வடவேங்கடத்தைப் பெறவேண்டும் என்ற உரிமை வேட்கை, திரைப்படக் கொட்டகைகள் பெருகிய அளவிற்கு, சிற்றுண்டிச் சாலைகள் பெருகிய அளவிற்கு, நூலகங்கள் பெருகியிருக்கின்றனவா என்ற வினா, நம்நாடும் இனமும் வளராமல் போனதற்கு ஒன்றை ஒன்று அழிக்கும் மனப்பான்மைதான் எனும் கருத்து தமிழிலக்கியம் காட்டும் நெறிகள், திருக்குறளைப்பற்றிய விளக்கங்கள் முதலாயின இடம்பெற்றுள்ளன.

கம்பன், காந்தி, அகிம்சை, கதர், பூமிதானஇயக்கம், புதிய சமுதாயம், எழுத்தாளர் கடமை, ஒருமைப்பாடு, ஆன்மிகம், சமாதானம், அமைதி, ஆகிய தலைப்புகளில் அடிகளார் தம் சிந்தனைகளைப் பதிவு செய்து உள்ளார். அமெரிக்காவில் அடிகளார் நிகழ்த்திய பொழிவும், அழகப்பா பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய பட்டமளிப்பு விழாப்பொழிவும் இத்தொகுதியில் இணைக்கப் பெற்றுள்ளன. அமெரிக்க அறக்கட்டளைப் பொழிவில் அடிகளார்தம் சமுதாயச் சிந்தனை புள்ளி விவரங்களுடன் வெளிப்பட்டிருக்கிறது (ப. 441).

அழகப்பா பல்கலைக்கழக உரை ஒரு சமயச் சாமியாரின் உரை என்ற எல்லையைக் கடந்து சமுதாய அக்கறை உள்ள பொருளியல் மேதையின் உரையாகப் பொலிகிறது.

அடிகளாரின் சமுதாய, சமய, கல்வி, பொருளியல், அரசியல் சிந்தனைகளின் பெட்டகமாக இந்நூல் திகழ்கிறது. இந்நூலை வாசிப்போர், தமிழை நேசிப்போராகவும், மனித நேயத்தைப் பூசிப்போராகவும் மலருவர் என்பது திண்ணம்; என் அழுத்தமான எண்ணமும் கூட -