பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/191

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயவியல் கட்டுரைகள்

179


வாதவூரரைப் பிடிக்கவும் இல்லை. அவரது அறிவுருவைச் சிதைக்கவும் இல்லை. "இங்கே தமிழ் மாணவன் புதைக்கப்பட்டு கிடக்கின்றான்” (Here lies a student of Tamil) என்று புதைகுழியில் பிறநாட்டுப் பெரியாராகிய போப் ஐயரை எழுதச் செய்தது. திருவாசகமே யாகும். நோபில் பரிசு பெற்ற கவி ரவீந்திரநாத் தாகூருக்குத் 'தமிழ் படிக்க வேண்டும்' என்ற ஆசையை எழுப்பியதும் திருவாசகமே யாகும். வள்ளுவர் குறளும் வாதவூரரது வாசகமும் தமிழரின் தனிப் பெரும் வைப்பு: தமிழரின் கண்கள்.

வள்ளுவரும் வாதவூரரும் சமய நெறியில் ஒத்த கொள்கையினர். வள்ளுவரின் சமயம் பலப்படச் பேசப்படுகின்றது. தமிழரின் சமயம் 'சைவத் திருநெறி' என்பதை ஸர் ஜான் மார்ஷல், போப் ஐயர் போன்ற மேனாட்டறிஞர்களுடைய ஆராய்ச்சியின் முடிபால் அறிந்துகொண்டமையாலும், சைவ நூற் கொள்கைகட்கு இணங்க முதற்கடவுளை மாதொரு பாகன் என்னும் பொருட்பட 'ஆதிபகவன்' என்று கூறினமையானும், சைவத்திரு நெறியின்கண் பேசப்படும் திருவடிப் பேற்றைப் பத்து குறள்களுள் ஏழு குறள்களில் வலியுறுத்தி யுள்ளமை யானும், சைவப் பெருமக்களை அழைப்பதுபோல ஆசிரியரை நாயனார் என்று அழைக்கின்றமை யானும், அவரது திருவுரு சைவத் திருவேடப் பொலிவுடன் விளங்குகின்றமையானும் வள்ளுவர் சைவத்திருநெறியினர் என்றே நாம் கொள்ள வேண்டியிருக்கின்றது. வாதவூரரைப் பற்றி யாவருக்கும் இந்த விஷயத்தில் ஐயமே இல்லை. இனி அவர்களது வாய்மொழிகளைக் கொண்டு அவர்களைப் பார்ப்போம்.

வள்ளுவர் வாய்மையின் பயன் கடவுளைத் தொழுதல் என்று கூறினார்.

"கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றா டொழாஅ ரெனின்"