பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/205

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயவியல் கட்டுரைகள்

193



தினையின் பாகமும் பிரியாமலிருக்க வேண்டுகின்றார். இந்த உரிமையைக் கேட்கின்றபொழுது அன்பர் தமது நிலையைச் சிந்தித்துப் பார்க்கின்றார். நீதியுணர்ச்சியோடு, நடுவு நிலைமை உள்ளத்தோடு சிந்தித்துப் பார்க்கின்றார். அறனறிந்து ஆன்றமைந்த அமைச்சரல்லவா அவர்? தெரிதலும் தேர்ந்து செயலும் வல்ல அமைச்சர் அல்லவா? சிந்தனையின் முடிவில் அவர் தம்மை உணர்ந்தார். தம் குறையை உணர்ந்தார். தமது குறையை,

"தண்மலரிட்டு முட்டா திறைஞ்சேன்”

"ஆமாறுன்திருவடிக்கே அகங்குழையேன்; அன்புருகேன்"

"விரையார்ந்த மலர்துவேன்; வியந்தலறேன்
நயத்துருகேன்"

என்று சொல்லுகின்றார். இருப்பினும் திருவடி இன்பத்தைப் பெற விரும்புகிறேன். கடமையைச் செய்யாது உரிமையைப் பெற விரும்புகிறேன். என்னே அதிசயம்? என்று சிந்திக்கின்றார். அன்பர்.

'எச்சம் அறிவேன் நான் எனக்கு இருக்கின்றதை அறியேன்' என்பது மாணிக்கவாசகர் வாக்கு.

"கடவுள் உண்டா? கடவுள் என்று ஒன்று இருந்தால் ஒருவர் துன்பத்தையும் மற்றவர் இன்பத்தையும் அனுமதிப்பானேன்? எத்துணையோ கோயில்களில் பூசைகள் நடந்தும் நாட்டைப் பஞ்சம் நலிப்பானேன்?' என்றெல்லாம் கேட்கின்ற அன்பர்களுக்கு அடிகளின் சிந்தனை பதில் கூறுகின்றது.

10. சேக்கிழார் நெறி

சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் வரலாற்றுக் காப்பியம், புராணிக காலத்துச் செல்வாக்கின் காரணமாகப் "பெரிய புராணம்" என்று பெயர் சூட்டப் பெற்றுள்ளது.