பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/206

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


புராணம் என்ற சொல்லுக்குப் "பழைய வரலாறு” என்பது பொருள். ஆனால், காலப் போக்கில் உள்ளனவும், புனைந்து கூறவனவும் இணைந்த நிலையில் புராணங்கள் தோன்றலாயின. அதனால் காலப்போக்கில் புராணங்கள் மீது அறிஞருலகத்திற்கு இருந்த ஈடுபாடு குறைந்தது.

ஆனால், சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் மாக்கதை உண்மையான வரலாற்று நூல், பத்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழகத்தின் உளவியல், சமூகவியல், சமயவியல், அரசியல் ஆகியவற்றினைப் பெரிய புராணம் மூலம் தெளிவாக அறிய முடிகிறது. சேக்கிழார் சோழ நாட்டின் முதலமைச்சராக இருந்தவர். இவரின் அமைச்சுப்பணி சோழ அரசுக்கு எவ்வளவு பயன்பட்டதோ தெரியாது. ஆனால், திருத்தொண்டர் காப்பியத்துக்கு அடிப்படையாகவுள்ள வரலாற்றுத் தடயங்கள் காண்பதற்குப் பெரிதும் உதவியாக இருந்திருக்கவேண்டும். வரலாற்றுப் போக்கில் எந்த ஒரு கருத்தும் அல்லது பொருளும் தவற விடாமல் சாலைகள், ஊர்கள் - அவையிருந்த நிலை ஆகியன அனைத்தையும் நூல் புலப்படுத்துகிறது.

சேக்கிழார், தமது நூலின் விழுமிய கருத்தாகக் குறிக்கோளாகத் திருத்தொண்டையே எடுத்துக் கொண் டிருக்கிறார். அடியார்களானாலும், இறைவனானாலும் அவர்களுடைய தகுதி குறித்துப் போற்றப் பெற்றுள்ளதைவிட அவர்கள் இயற்றிய தொண்டு அல்லது பணி காரணமாகவே போற்றப் பெற்றுள்ளார்கள், வாழ்க்கை, தொண்டிற்குப் பயன்படும் பொழுதுதான் முழுமையடைகிறது; பொருளுடையதாகிறது; பயனுடையதாகிறது. இதுவே பெரிய புராணத்தின் தத்துவம்.

இன்று சமூகத்தில் நிலவும் சில தீமைகள் பன்னெடு நாள்களாகத் தமிழகத்தில் நிலவிவரும் தீமைகளேயாம். அவற்றில் ஒன்று தீண்டாமை. தீண்டாமை நிலப்பிரபுத்துவ சமுதாயத்தை யொட்டி வளர்ந்த பண்ணையடிமைச்