பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/214

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



ஆம். வாழ்க்கை ஒரு மருத்துவமனை-மக்களெல்லாம் நோயாளிகள். இறைவன் நோய் தணிக்கும் மருத்துவன். இதுதான் உண்மை. இந்த வாழ்க்கையிலே உணர்வுகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் நாம் இடம் கொடுக்கக் கூடாது.

இன்பமும் துன்பமும் உலகின் இயற்கை எனவே இன்பம் வந்தபோது இனிதென மகிழ்வதோ, துன்பம் வந்த போது துளங்கிச் சோர்வதோ சரியான கொள்கையல்ல. ஆன்றோர் இந்த இருவகையுணர்வுகளுக்கும் இடங்கொடுக்க மாட்டார்கள் என்று பேசுகிறார். .

"இன்பம தடைந்த காலை
        இனிதென மகிழ்ச்சி யெய்தார்,
துன்பம துற்ற போது
        துண்ணெனத் துளங்கிச் சோரார்
இன்பமும் துன்பந் தானும்
       இவ்வுடற் கியைந்த வென்றே
முன்புறு தொடர்பை ஒரார்
     முழுவது முணர்ந்த பேர்கள்"

என்று அழகாகக் குறிப்பிடுகிறார். எனவே இன்பதுன்பங்களை நாம் அனுபவிக்கப் பழக வேண்டும். 'ஓடும் பொன்னும் ஒப்ப நோக்கும்' உள்ளத்திண்மை பெற வேண்டும்.

கச்சியப்ப சிவாசாரியாரின் போர்ப்படலப் பாடல்கள் போற்றிப் பாராட்டத்தக்கன. கச்சியப்ப சிவாசாரியார் போர் வரலாறு-போர் அனுபவம்-போர் நுட்பம் கைவரப் பெற்றவர் என்று கருதப்பெறத்தக்க வகையில் அந்தப் போர்ப்படலம் அமைந்திருக்கிறது.

போரில் சூரபதுமன் அழிக்கப் பெறவில்லை. உயிர்கள் உள்பொருள், இறைவனைப் போல், 'என்றும் உள்ள பொருள்' என்று ஆகிவிட்ட பிறகு அதை அழிப்பது எப்படி? எனவே, சூரபதுமன் அழிக்கப்பட்டான் என்பது தவறு. மேலும்,