பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/217

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயவியல் கட்டுரைகள்

205


வாழ்க்கைக்கு வழிகாட்டுவோர் சிலர்; அந்தச் சிலரினும் வாழ்க்கை அனுபவத்தைப் பெறாமலேயே - அனுபவம் இல்லாமலேயே வழிகாட்ட வருபவர்கள் உண்டு. தித்திக்கும் செந்தமிழில், முருகனின் திருப்புகழ் பாடிய சந்தத் தமிழ் வித்தகர் அருணகிரியார் நிறைந்த அனுபவம் பெற்று வழிகாட்ட வந்தவர். அவர் 'அனுபவ நிறைவான' ஆசிரியர். வாழ்க்கைக் கடலில் வீழ்ந்து நீந்தி, அமிழ்ந்து, மிதந்து, மூச்சுத் திணறிக் கடைசியில் முத்தும் எடுத்துக் கொண்டு வந்தவர். ஆழக் குளித்து இறைவன் என்ற முத்தை எடுத்து வந்தவர்.

கடலுக்கும் வாழ்க்கைக்கும் நிறைந்த தொடர்பிருக்கிறது. கடலுக்கு ஆழம் தெரியாது - வாழ்க்கைக்கு எல்லை தெரியாது. கடலில் அலைகள் மோதும். வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் மோதும். கடலில் ஆழக்குளித்து முத்தெடுப்போரும் உண்டு. மீன் பிடிப்போரும் உண்டு, வெறுங்கையோடு கரையேறுவோரும் உண்டு. வாழ்க்கையில் பல அனுபவங்களைப் பெறுவோரும் உண்டு. நைந்து நைந்து வாழ்வின் பயனை அனுபவிக்காமல் சாவோரும் உண்டு. அருணகிரியின் வாழ்க்கை ஒர் அலைகடலை ஒத்தது. அங்கு சிற்றலையும் உண்டு. பேரலையும் உண்டு. வாழ்க்கையில் சிற்றலையாகிய இன்பமும் பேரலையாகிய துன்பமும் உண்டு. அலை வரும் போது மிதந்தோ, மூழ்கியோ அதினின்று நாம் தப்பித்துக் கொள்வது போல, இன்ப துன்பங்களில் அமிழ்ந்து விடாமல் மிதக்க - அனுபவிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இன்பத்தை மதுவென்றோ, துன்பத்தை மருந்தென்றோ எண்ணி மயங்கவோ தயங்கவோ கூடாது. இரண்டையும் மருந்தென்று கருதி அனுபவிக்கப் பழக வேண்டும். அருணகிரியார் ஆழக் குளித்து இறைவன் என்ற முத்தை எடுத்தவர். கடலில் முத்தெடுப்பதுதான் சிறந்தது. வாழ்க்கையில் கடவுள் நம்பிக்கையோடு வாழ்வதுதான் சிறந்தது.

மணிக்கவாசகரைக் காட்டிலும் அருணகிரியாருக்குத் தான் வாழ்க்கை அனுபவம் மிகுதியும் உண்டு என்று நான்