பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/219

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயவியல் கட்டுரைகள்

207


கிறோமேயொழிய எந்தச் சாமி எந்தத் தத்துவம் உடையது என்பதைச் சொல்லிக் கொடுக்கவில்லை-சொல்லிக் கொடுப்பதுமில்லை.

முருகன் திருக்கோயிலை மலைமீது அமைத்த நமது தமிழர்கள் உயர்ந்த தத்துவத்தோடுதான் அமைத்திருக் கிறார்கள். வெளியே நாம் காணும் மலைப்புறத்தே குன்று இருக்கிறதே அது நமது அகத்திலே உள்ள குன்று. 'குணமெனும் குன்றேறி நின்றார்' என்றார் திருவள்ளுவர். திருக் கோவிலிலே முருகனைத் துறவுக் கோலத்தில் காண்கிறோம். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது பரிபூரணத்துவம் அடையும் போது மனிதன் துறவியாவான் என்பதுதான்.

ஆணவம் ஒரு பெருங்காயப் பாண்டம்போல; அது எப்போதும் மணம் வீசிக்கொண்டே இருக்கும். சில சமயங்களில் கொஞ்சம் அதிகமாக இருக்கும்.

விஞ்ஞான ஆசிரியர் வாய்ப்பாட்டை நம்பவில்லையானால், மருந்துகளுக்கும், சோதனைக் குழாய்களுக்கும்தான் கேடே தவிர உரிய பயன் கிடைக்காமல் போகாது. அது போல, மக்கள் இறைவனை-திருவருளை நம்பவில்லையென்றால், வாழ்வின் பெரும் பயன் இல்லாமற் போகும். இறைவனைப் பற்றிக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருத்தல் கூடாது.

'ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் சோதிக்க வேண்டாம்' என்கிறார் திருஞானசம்பந்தர். தொழுது - தொழுது தேவர்களின் கைகள் சிவந்தன-பரவை வீட்டிற்குச் சுந்தரரின் தமிழ்ப் பாடல் கேட்க நடந்து நடந்து சிவபெருமானுக்குக் கால்கள் சிவந்தன என்பது வரலாறு. தமிழ்ப் பாடலைக் கேட்பதற்காக நடந்து நடந்து கால்கள் சிவந்த சிவபெருமானுக்கு இன்று தமிழில் வழிபட்டால் பிடிக்காமல் போகுமா?