பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/229

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயவியல் கட்டுரைகள்

217


கவலைப்பட்டுக் கவலைப்பட்டு இந்த நாடே இப்படிப்பட்ட, நாசத்திற்கு வந்துவிட்டது. இதை நீக்குவதற்கு என்ன வழியைத் தேடியிருக்கிறீர்கள்? உங்கள் சாஸ்திரங்களையெல்லாம் கங்கையிலே வீசி எறியுங்கள். மக்களுக்கு அதிகமான உணவுப் பொருள்களையும் ஆடைகளையும் உற்பத்தி செய்ய கற்றுக் கொடுங்கள். அதன் பிறகு அவர்களுக்கு நேரமிருந்தால் சாஸ்திரங்களைக் கற்பியுங்கள்.

5. பேச்சும் செயலும்

தமிழ் நாடு பேச்சில் முன்னேறிய நாடு. தமிழர்கள் பேசுவதில் வல்லவர்கள். ஆண்டுதோறும் பல நூறு பேச்சாளர்கள் உருவாகி வளர்ந்து வருகின்றனர். நமது நாட்டில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான மேடைகள் நடைபெறுகின்றன. ஏன்? பேச்சே ஒரு தொழிலாகி விட்டது. பேச்சில் சொற்சிலம்பங்கள் இருக்கும்; தத்துவப் பொழிவுகள் விளங்கும்; புதுமை பொலியும்; புரட்சிக் கனல் வீசும். மூச்சு விடாமல் பேசுவார்கள். இப்படிப் பேச்சுக் கச்சேரி பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறதே! நாட்டில் நடந்தது என்ன ? அறியாமை நீங்கியதா? வறுமை நீங்கியதா? தீண்டாமை நீங்கியதா? இல்லை, சாதி வேற்றுமைகள்தான் நீங்கியதா? ஒன்றும் நடைபெறவில்லை. ஏன்?

சொல்லுதல் யார்க்கும் எளிது. செயல் யாவர்க்கும் அரியது என்று வள்ளுவம் அறிவுறுத்தியது. இதுவே உண்மை. சிலருக்குச் சொல்லத் தெரியும். சொல்வதற்குரிய அறிவு விளங்கும். ஆனால் அச்சொல்லின் பொருளைச் செயற்படுத்துவதில்லை. காய்க்காத மலர்கள் அழகாக இருக்கலாம்; மணக்கலாம் பசி தீருமா? மாந்தர் உலகின் முன்னேற்றம் பேச்சில் இல்லையே! செயலில் அல்லவா இருக்கிறது. வறுமையைப் பற்றி அம்மம்ம! எத்தனை பேச்சுக்கள் பட்டிமன்றங்கள்! கவிதைகள்! ஆனால், நடந்தது என்ன? பேசியவர்கள் இரண்டாவது ஊதியம் பெற்றார்கள்;வளர்ந்தார்கள்; கு.XV.15.