பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/232

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

220

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஆனால், மக்களின் வாங்கும் சக்தி, உலகச்சந்தை நிலவரம் ஆகியன அடிப்படையில் தான் செல்வம் பெருக இயலும், ஏன் படைப்பில் கூடப் படைப்பாளியின் - உழைப்பாளியின் உழைப்புத் திறன் குறைவின் காரணமாகப் படைப்புப் பொருள்கள் குறையலாம். தேவைக்குரியனவற்றைக் கூட உற்பத்தி செய்ய இயலாமல் போகலாம். இந்த மாதிரிச் சூழ் நிலைகளில் மக்களின் தேவைகள் நிறைவு செய்யப் பெறாது போதல் இயற்கை ஆயினும் தொடர்ந்த உழைப்பின் மூலமும் சுரண்டல் முறையிலிருந்து செல்வத்தைப் பாதுகாப்பதன் மூலமும் மக்கள் தங்களுடைய தேவையைப் பெற முடியும் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

சோஷலிசம் என்ற தத்துவம் அதன் அளவில் அது நிறைவான தத்துவம் அல்ல; கொள்கை அல்ல; கோட்பாடு அல்ல; ஆயினும், மனித குலத்தின் வறுமையை, ஏழ்மையை அகற்றும் பணியில் தொடக்கத்தில் சோஷலிசத்தைத் தவிர வேறு வழி இருப்பதாகவும் தெரியவில்லை. விவேகானந்தர் சோஷலிசத்தை விரும்பி ஏற்றுக் கொண்டார். அவர் அப்படி ஏற்றுக் கொண்டதற்குரிய காரணத்தை "நான் சோஷலிஸ்டாக இருப்பது அது ஒரு நிறைவுள்ள முறை என நான் நினைப்பதாலல்ல. ஆனால் முழுப்பட்டினியைவிட அரை வயிற்றுணவு மிக்கமேலானது" (விவேகானந்தர் அவரது சமூக-அரசியற் கருத்துக்கள். பக். 78) என்று விவேகானந்தர் அருளியுள்ளமையால் அறியலாம்.

ஆனால், இன்று சோஷலிசமே கேள்விக் குறியாக உள்ளது. ஏன்? சோஷலிச சமுதாய அமைப்பின் மூலம் உழைப்பாளர் கைக்கு ஆட்சி மாறியது. ஆட்சிக்கு வந்த உழைக்கும் வர்க்கம் உழைப்பைத் தவிர்த்தது. மெல்ல உழைப்பை மறந்தது. அதன் விளைவு சோஷலிச சமுதாய அமைப்பில் கண்ட நாடு, முதலாளித்துவ நாட்டில் இன்று இரக்க வேண்டியிருக்கிறது. மனித உலகம் தனக்குத்தானே தீமை இழைத்துக் கொள்கிறது!காப்பார் யார்?