பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/236

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

224

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உலகத்தை மானுட சமுதாயத்தின் வாழ்க்கை முறைகளைக் காணப்பெறும் - பொருள்களை முதலாகக் கொண்டு ஆராயும் முறை உலக லெனினியமாகும் அஃதாவது மனிதனின் எண்ணம் - சிந்தனை அனைத்தும் உலகின் சார்பில், அவன் சார்ந்துள்ள பொருள்களை முதலாகக் கொண்டு தொடங்குகிறது என்பதேயாகும். நமது இலக்கிய மரபும் லெனினியத்தின் வழிப்போக்கிலேயே அமைந்துள்ளது. தொல்காப்பியம் நிலவுலகத்தைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்காகப் பிரித்தது. குறிஞ்சி, மலையும் மலையைச் சார்ந்த நிலமுமாகும். மருதம், கழனியும் கழனியைச் சார்ந்த நிலமுமாகும். நெய்தல் கடலும் கடலைச் சார்ந்த நிலமுமாகும். தொல்காப்பியம் இங்ங்னம் நிலத்தைப் பிரித்துக் கொண்ட பிறகு, அந்த நிலத்திற்கு இயைந்தவாறே மனிதனின் ஒழுக்கத்தையும் கண்டு வகுத்துக் கூறுகிறது. அதாவது, ஒழுக்கம் சார்ந்த நிலச்சார்பல்ல; நிலத்தினைச் சார்ந்த ஒழுக்கமேயாகும். அதாவது; மூலம் - சிந்தனையும் ஒழுக்கமு மல்ல; நிலத்தின் இயல்பேயாகும். ஏன்? தொல்காப்பியன் ஒருபடி வளர்ந்து வழிபடும் தெய்வத்தையும் கூட நிலத்தின் சார்பினதாக அமைத்தான். கடவுள் என்ற மூலத்திலிருந்து நிலம் தோன்றிற்று என்பதற்கு மாறாக நிலத்தின் இயல்பில் பெற்ற உணர்வுகளுக்கேற்பக் கடவுள் வழிபாடு தோன்றுவ தோடன்றி நிலத்திற்கு நிலம் மாறுபடுவதாகவும் அமைந்தது எண்ணத் தக்கது.

திருவள்ளுவரும் மனிதனின் அறிவு, அவனிடத்தில் தோன்றுவது போலத் தெரிகிறதே தவிர, அவனிடத்திலேயே மூலமாகத் தோன்றுவதில்லை என்று தெளிவாகக் கூறுகிறார். அது மட்டுமன்றி மனிதனின் அறிவு, அவன் சார்ந்திருக்கின்ற இனத்திலிருந்தே தோன்றுகிறது என்றும் கூறுகிறார்.

"மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு”