பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/245

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயவியல் கட்டுரைகள்

233


முரண்பட்டு, ஒன்று அறிந்ததைப் பிறிதொன்று அறியாது குழப்பத்தை விளைவிக்கின்றன. கண், ஒளியை அனுபவிக்கிறது.

ஆனால், அதே ஒளியைச் செவி அனுபவிப்பதில்லை. செவி, இசை ஒலியைக் கேட்டு அனுபவிக்கிறது. கண், அந்த ஒலியைக் கேட்டு அனுபவிப்பதில்லை. இந்தப் பொறிகள் நுகர்தலிலும் சரி, தமக்கு ஒதுக்கப்பட்ட களங்களிலும் சரி, ஒரு வழிபட்ட குறையுடைய அறிவையே பெற்று விளங்குகின்றன. பூரணத்துவம் இல்லை. உயிர், மனத்தினும் மாறுபட்டது. உயிர் ஒன்றே, இந்த ஐம்பொறிகளாலும் பெறும் இன்பத்தை முற்றிலும் முழுதுமாக ஈடுபட்டு அனுபவிக்கிறது ஒரு விளக்கு, தன்னைச் சூழ்ந்திருக்கின்ற பொருள்களைக் காட்டித் தன்னையும் காட்டிக் கொள்வது போலச் சித்தத்தையும், பிறிது உண்டாயவற்றையும் அறிவித்துத் தன்னையும் அறிவித்து நிற்கும் என்று கூறின், உருவங்கள் முதலிய பொருள்களையும் அவற்றைக் காட்டி நிற்கும் விளக்கையும் கண்டு நிற்கும் கண்போல சித்தத்தையும் விடயத்தால் அறியும் இந்திரியங்களையும் உணர்வான் ஒருவன் தனியே உண்டென்று அறிதல் வேண்டும்.

இன்னும் ஒருயிர் நெறியினர் (ஏகான்ம வாதிகள்) உயிரை பற்றி விசித்திரமாக விளக்கம் கூறுவர். "அறிவுடைய உயிர் ஒன்றே, உடம்புகள் தோறும் வேறு வேறாய்க் காணப்படுகின்றது” என்பது அவர்தம் கொள்கை குடங்கள் தோறும் வேறு வேறாய்த் தோன்றும் திங்களின் வடிவு. அக்குடங்கள் உடைந்த வழி குடங்கள் தோறும் இருந்த திங்கள்தான் இல்லையாகித் திங்கள் ஒன்றுமே நிலைபெறுகிறது. அது போல, இவ்வுடம்புகளெல்லாம் போயவிடத்து, உயிர் ஒன்றேயாக இருக்கும் என்பதும் ஒரு கொள்கை. இந்தக் கருத்தும் உவமையும் நேரியதன்று. திங்களினிடத்துக் காணப்படும் ஒளி வடிவும், வட்ட வடிவும் அதன் நிழல்கள் எல்லாவற்றினும் காணப்படுதல் போல, ஒருயிரினிடத்துக்

கு.XV.16