பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/254

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

242

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


முடியாததொன்று. நூற்றுக்கணக்கான படித்த இளைஞர்கள், பெரியவர்கள் தாங்களே தட்டும் மண்வெட்டியும் தாங்கி, சேறும் சகதியும் அள்ளிக் கொட்டிய காட்சி அரிமர்த்தன பாண்டியன் காலத்தில் வைகைக்கு அணை கோலிய காட்சி போலவே இருந்தது. இதனையொட்டி அத்திருக்கோயிலும் அருள்நெறித் தொண்டர் கழகத்தின் முயற்சியால் பல அன்பர்களின் பேருதவி கொண்டு சுற்றுப் பிரகாரங்கள் தளவரிசை முதலியன இடப்பெற்று சிலரே வந்து கொண்டிருந்த கோயில் இன்று பலர் வரும் திருக்கோயிலாக மாறியது. இது போலவே மாணிக்கவாசகப் பெருமான் அவதரித்த திருவாதவூர் திருத்தலத்திலும் நமது ஊழியர்கள் 1952-ஆம் ஆண்டில் உழவாரப் பணிசெய்து திருவாசக விழாவும் நடத்தினர். அந்த எழுச்சியின் பயனாக நமது இயக்க அன்பர்கள், ஊழியர்கள் முயற்சியால் அத்திருக்கோயிலுக்கு மின்விளக்கு அமைக்கப்பட்டது. அதிலிருந்து தொடர்ச்சியாக அக்கோயில் முழுமையும் திருப்பணியாகும் அளவுக்கு வளர்ந்தது. அது போலவே திருநாவுக்கரசு சுவாமிகள் பல ஆண்டுகள் தங்கி உழவாரப் பணி செய்த திருப்பூந்துருத்தி திருநாவுக்கரசர் திருமடம் கவனிப்பாரற்றுப் பாழாகத் தொடங்கிற்று. அங்கும் நமது ஊழியர்கள் உழவாரப் பணி தொடங்கி அத்திருமடத்தை (காலியிடத்தை) கூட்டித் துப்புரவு செய்து, அயறாது திருப்பணி செய்தனர். தமிழகத்தின் தனி சமயத் தலைவராக திருத்தொண்டின் நெறி வாழ வந்த திருநாவுக்கரசப் பெருமான் வாழ்ந்த இடமிருந்த கேவல நிலை எண்ணிப் பார்த்த ஒவ்வொரு வரையும் வேதனைக்குள்ளாக்கியது. அதிலும் எண்ணத்தின் இதயக் குமுறல் பயனையே தந்தது. தற்பொழுது அத்திருமடம் புதுப்பிக்கும் திருப்பணி நடந்து வருகிறது. ஒருநாள் இரவு பத்து மணியிருக்கும். கும்பகோணம் அரசலாற்றங்கரையில் தனியாக உட்கார்ந்திருந்தோம். சில இளைஞர்கள் அவ்வழியே வந்தனர். அவர்களை அழைத்துச் சில கேள்விகளைக் கேட்டுப் பேசியதன் மூலம் அவர்கள் அருள்நெறி