பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/259

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயவியல் கட்டுரைகள்

247


வளர்ச்சியடைந்திருக்கிறது என்று எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. மிகச் சிறிய அளவில் தொடங்கிய இயக்கம் இன்று ஆசிய நாடுகள் முழுவதும் பரவி ஒரு பேரியக்கமாக மலர்ந்திருப்பதை எண்ணிப் பூரிப்படை கின்றோம். இந்த அளவுக்கு நமது இயக்கத்திற்குத் தோன்றாத் துணையாக இருந்து அருள்பாலித்த குன்றில் அமர்ந்துறையும் குமரப் பெருமான் திருவடிகளைச் சிந்தித்து வாழ்த்து கின்றோம். இயக்கத்தின் வளர்ச்சியில் ஆதரவு காட்டிய அன்பர்களுக்கும் பொருள் வழங்கிய புரவலர்களுக்கும் அயறாது ஆர்வத்துடன் ஊழியம் செய்த ஊழியர்களுக்கும் நம்முடைய நன்றி கலந்த வாழ்த்து.

16. கோயில்களும் இளைஞர்களும்

நாம் அள்ளியுண்ணாமல் கடவுள் வந்து ஊட்டுவார் என்று கருதுகிற அறவீனமான கடவுள் நம்பிக்கை எனக்கில்லை; "கொடுக்கிற தெய்வம் கூரையைப் பொத்துக் கொண்டு கொடுக்கும்” என்ற பைத்தியக்காரத்தனமான கடவுள் நம்பிக்கை இடைக்காலத்தில் முளைத்ததுதான். நாம் உழைக்காமல், முயற்சி செய்யாமல் சோம்பேறியாக வாழ வேண்டும் என்பது இறைவனின் திருவுள்ளும் அல்ல - சாதாரணமான ஒரு தாய்கூடத் தன் குழந்தை தத்தித் தத்தி முயன்று நடை பழக வேண்டும் என்றுதான் விரும்புவாளே தவிர, அது சோம்பேறியாக இருக்க வேண்டும் என்று விரும்பமாட்டாள். உலகத்தில் ஒரு தாயே தன் குழந்தை சோம்பேறியாக இருக்கக் கூடாது என்று விரும்புகிறாள் என்றால் உலகின் தாயாக இருக்கிற கடவுள் தனது மக்கள் சோம்பேறியாக இருக்க வேண்டும் என்று கருதுவாரா? நாம் உழைத்து வாழ வேண்டும் என்பதற்காகவே கடவுள் நமக்குக் கைகளையும் கால்களையும் தந்திருக்கிறார். நிலத்தைத் தந்து