பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/285

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயவியல் கட்டுரைகள்

273


வளர்வீர்கள்; வாழ்வீர்கள். காரணம், அது நம்முடைய வாழ்க்கையை அலைமோதவிட்டு விடுகிறது. எப்படி இருந்தாலும் நமக்கு ஒரு கடவுள் இருக்கிறார். அவரை நாம் நம்புகிறோம். நம்முடைய தன்னம்பிக்கை இருக்கிறது. கடவுள் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் என்பது இரண்டு பெரிய இயந்திரங்கள்; பெரிய கருவிகள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

எனவே இந்த நம்பிக்கைகளோடு நீங்கள் வாழ வேண்டும். கவலை என்பதைச் சற்றும் அணுகவிடக் கூடாது. அது மனித உலகத்தையே அரித்துத் தின்கிற கொடிய பூச்சி, அதற்கு இடம் கொடுக்காதீர்கள். இறைவனிடத்திலே, உனக்கு நான் என்ன ஏவல் செய்ய வேண்டும் என்று கேட்டுப் பழகுங்கள். அவருக்கு உங்களால் இயன்ற சிறிய சிறிய பணிகளைச் செய்து, காசு இல்லாமல் பணம் இல்லாமல் நல்ல பணிகளைச் செய்து, நீங்கள் பணிவிடை செய்து வாழ வேண்டும். எந்தத் தொழிலாக இருந்தாலும், இறைவனுடைய கருணையினால், அது நல்ல தொழில் என்று உணர வேண்டும், நமக்கு இருப்பதிலே திருப்தி இல்லாமல், இல்லாதவைகளைப் பற்றிக் கவலைப்பட்டாலே கவலை தோன்றிவிடும். நமக்கு இப்பொழுது கிடைப்பது கஞ்சிதான் என்று சொன்னாலும், இந்தக் கஞ்சியை விட சிறந்த அமுதம் வேறொன்றுமில்லை என்று கருதிச் சாப்பிட்டால், அது அமுதமாக மாறிவிடும். அமுதமே கிடைத்து விடுகிறது. இந்த அமுதத்தைவிட அந்த அமுதம் சிறப்பானது என்று எண்ணிச் சாப்பிட்டால் சாப்பிட்டது நஞ்சாக மாறிவிடும். எனவே, மனிதனுக்குத் தன்னம்பிக்கையும், தன்னிறைவும், போதும் என்ற மனப்போக்குகளும் தேவையானவை.

எதிர்காலத்தைப் பற்றி நன்கு திட்டமிட வேண்டும். எல்லாவற்றிற்கும் நம்முடைய சக்திதான் அடிப்படையாக இருக்கிறது. அறிவு, ஆற்றல் படைத்ததாக உலகத்தில் பார்க்கலாம். சிலர் அறிவு உடையவர்களாக இருப்பார்கள்.