பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/287

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயவியல் கட்டுரைகள்

275


வெற்றி பெறுவோம் என நம்பிப்போய் உட்கார்ந்து எழுதினால் தெரியாத வினாவுக்குக் கூட விடை கிடைக்கும். "தவறி விடுவோமா? தவறி விடுவோமா?” என்று பயந்து கொண்டே இருந்தால், படித்தது கூட மறந்துவிடும். எனவே, வாழ்க்கையில் தன்னம்பிக்கை தேவை. "நான் இதைச் செய்வேன்; செய்யக்கூடும்; செய்ய முடியும்" என்ற தன்னம்பிக்கையோடு வளர வேண்டும்; வாழ வேண்டும்.

எனவே, சைவ சமயம் என்பது ஆற்றல் மிக்க சமயம், அது ஒரு காலத்திலும் கொத்தடிமைப்பட்டதே கிடையாது.

"நாமார்க்கும் குடியல்லோம்
நமனை யஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம்
நடலை யல்லோம்
ஏமாப்போம்; பிணியறியோம்
இன்பமே எந்நாளும் துன்பமில்லை”

என்று அப்பரடிகள் பாடினார். பாட்டை பார்த்தால் பீடு நடை போடுகிற பாட்டாக இருக்கும். ஆனால், அது விபூதி பூசிய துறவி பாடின பாட்டு. அந்தத் துறவி, பெரிய அரசியல் புரட்சியும் அருளியல் புரட்சியும் செய்தவர்.

"நாமார்க்கும் குடியல்லோம்; நமனையஞ்சோம்” என்கிறார். சிலபேர் செத்துவிட்டால் கூடப் பரவாயில்லை. செத்து விடுவோமா என்று பயந்து கொண்டே செத்துப் போய் விடுவார்கள். எவ்வளவு முறைதான் ஒருவர் சாவது? சிலபேர் நடை பிணம் போல் நடப்பார்கள். உற்சாகமே இருக்காது; ஊக்கமே இருக்காது; கிளர்ச்சியே இருக்காது. ‘என்னவோ இருக்கிறேன்' என்பார்கள். அது கூடாது.

'நடலையல்லோம்; ஏமாப்போம்; பிணியறியோம். இன்பமே எந்நாளும் துன்பமில்லை என்று சொன்னார்கள். இந்த அருமையான சைவசமயத்தை நீங்கள் வாழ்க்கையாக