பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/296

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

284

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தமிழில் தொழிலியல், பொருளியல் நூல்கள் தேவை. நீண்ட நாட்களாக சக உறவைப்பற்றி-ஒப்புரவைப்பற்றி பேசுகிற நாட்டிலே, நேருக்கு நேர் ஒருவருக்கொருவர் முரண்பட்டுப் பேசுகின்ற காட்சிகளையும் தமிழனைத் தமிழன் இழிவு படுத்துகின்ற காட்சியையும் பார்க்கிறோம்.

இவைகளைப் பார்க்கும்போது நம்முடைய இலக்கியங்கள் நம்மால் சீரணிக்கப்படவில்லை என்று தோன்றுகிறது.

தவிர, குடும்பங்களில் வயது வந்தவர்களுக்கு இலக்கியப் பயிற்சி இன்று கிடையாது.

இந்த நாட்டில் மிகச் சிறந்த பொதுமறையாக விளங்கும் திருக்குறள்கூட மூன்றரைக்கோடி தமிழர்களில் இன்னும் இரண்டு கோடி மக்களுக்கு அறிமுகம் செய்யப்படவில்லையென்றால் அது என்னுடைய பொதுமறை என்று சொல்லித் தைரியமாக பவனி வருகின்ற நாட்களை உருவாக்கவில்லையென்றால் நம்முடைய இலக்கிய முயற்சிகள் எல்லாம் எங்கு சென்று முடியும் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

தமிழர்கள் என்றால் அவர்களுக்கென ஒரு நூல் இருக்கிறது, அது வாழ்க்கை நூல். திருக்குறள் என்று சொல்லி, மூன்றரைக் கோடி தமிழர்களில் ஒரு கோடித் தமிழரைப் பாமரர் என்று ஒதுக்கிவிட்டால்கூட இரண்டு கோடித் தமிழர்களாவது படிக்கவேண்டும்.

ஒன்றாக இருக்க வேண்டும் என்ற விருப்பம் தேசத்தலைவர்கள் பலருக்கு இருக்கிறது. ஆனாலும் இந்தியா ஒன்றே என்பதை உருவாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால், அப்படி விரும்புகிற அரசியல் தலைவர்களுக்கு ஒரு யோசனை சொல்லத் தோன்றுகிறது.

ஒரு மொழியைப் பொது மொழி ஆக்குவதன் மூலம் இந்திய தேசத்தின் ஒற்றுமையைக் காப்பாற்ற முடியாது. இந்த நாட்டிலே எல்லா மொழியினர்க்கும், எல்லா மதத்தினருக்கும் ஏற்றதாக ஒரு தேசிய நூல் இருக்கிறது.