பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



18

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


திருவள்ளுவர். கல்வியே செல்வம். எப்படி? அறிவறிந்த ஆள்வினைதானே செல்வத்தைச் சேர்க்கும்; பாதுகாக்கும். அதுமட்டுமல்ல. எப்போதும் அழியாத் தன்மையுடன் வளர்வது கல்வியும் அறிவுமேயாம். அதனால் "கேடில் விழுச்செல்வம்" என்றார்.

"கல்வியினுரங் கில்லை சிற்றுயிர்க்கு உற்ற துணை”

என்றார் செந்தமிழ்க் குமரகுருபரர். கல்வியின் இன்றியமையாத் தன்மையை எண்ணிய பாவேந்தன் பாரதிதாசன்,

"கல்லாரைக் காணுங்கால் கல்வி நல்காக்
கசடர்க்குத் தூக்குமரம் அங்கே உண்டாம்"

என்றார்.

"கல்வியே ஆன்மாவின் உணவு” என்றான் மாஜினி. "கல்வி இல்லையேல் நம் ஆற்றல்கள் எல்லாம் தேங்கி நின்று விடும். பயன் தரா" என்றும் கூறினான். மனிதன் பிறப்பதில்லை. மனிதன் படைக்கப்படுகிறான். மனிதன் உருவாக்கப்படுகிறான். ஒரு குழந்தை பிறக்கிறது-அவ்வளவுதான்! அந்தக் குழந்தை முறையாக வளர்க்கப்படுவதன் மூலம் மனிதன் உருவாகிறான். ஏன்? மனிதனை உருவாக்குவதில் கல்வி வகிக்கும் இடம் பெரிது. அதனால்தான் “கற்காமல் இருப்பதைவிடப் பிறக்காமல் இருப்பதே மேல்” என்றான் பிளேட்டோ. திருவள்ளுவரும் கல்வியைப் பற்றி விரிவாகப் பேசுகிறார்.

கல்வி உளவியல்

மானுட வாழ்க்கை சிறந்து விளங்க, பருவம்தோறும் பருவங்களுக்கிசைந்த கல்வி கிடைக்கச் செய்யவேண்டும். பள்ளி செல்லும் வயதுக்கு முந்திய பருவத்தின் உளவியல், ஆரம்பப்பள்ளி மாணவர்களின் உளவியல், இளைஞர்களின் உளவியல் ஆகியவை பருவ உளவியலின் பிரிவுகளாகும். கற்பித்தலின் உளவியல், வளர்ப்பின் உளவியல், ஆசிரியரின்