பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/301

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

289


ஒத்தன. மொழிகள் எல்லாவற்றையும் ஆராயுமிடத்து அவைகள் எல்லாம் சில இனங்களில் அடங்குகின்றன. அவ்வினங்களும் பின்பு ஒரு தனிமொழியினின்றும் பிரிந்தனவாகக் காணப்படுகின்றன. அத் தனிமொழி எதுவென நீண்ட காலம் ஆராயப்பட்டது. இன்று மேல்நாட்டு அறிஞர்கள் செய்துள்ள ஆராய்ச்சிகளை ஒருங்கு வைத்து நோக்குவோமாயின் தமிழ் மொழியே அம்மொழி என்று பெறப்படும்.

இங்ஙனம் கூறுவது பேராசையால் அல்ல. பழந் தமிழ் மக்களது நகரங்களாகக் கருதப்படும் மொகஞ்சதாரோ, ஹரப்பா முதலிய நகரங்களில் தமிழ் வழங்கிற்று. மதுரை, திருநெல்வேலிப் பக்கங்களில் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட சவச் சமாதிகள் தோண்டிக் கண்டு பிடிக்கப்பட்டன. அவைகளிற் சிந்து வெளியில் வெளியான புதை பொருள்களில் காணப்பட்டவை போன்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. ஐதராபாத்தில் தோண்டிக் கண்டுபிடிக்கப்பட்ட சமாதிகளில் கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டங்களிலும் அவ்வகை எழுத்துக்கள் காணப்பட்டன. இலங்கையிலே கேகாலை என்னுமிடத்தில் உள்ள மலை ஒன்றிலும் அவ்வகை எழுத்துப் பொறிக்கப்பட்டிருக்கின்றது.

இவைகளை யெல்லாம் ஒருங்கு வைத்து ஆராயுமிடத்து இமயமலை முதல் இலங்கைவரையில் ஒரு மொழியே ஒரு காலத்தில் வழங்கிற்று என்பதும் அமொழி தமிழ் மொழியே என்பதும் தெரிய வருகிறது. மேலும், மக்கள் இனத்தின் தோற்றமே தமிழகத்தில்தான் என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். இற்றைக்கு இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைய நாகரிகமாகக் கருதப்படும் "லெமூரியா கண்டம்" தமிழ் நாகரிகத்தில் சிறந்து இருந்தது என்பது வரலாறு. நமது நினைவெல்லைக்கும் வரலாற்று அறிவுக்கும் எட்டியவரை தமிழ் வரலாற்றில் நமக்குத் தோன்றும் காலம் கி.மு. 30,000 ஆகும். இக் காலத்தில் தமிழ் மொழி பண்பட்ட முறையில் சங்கங்களின் மூலம் வளர்க்கப்பட்டது.