பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/304

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

292

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பழமைக்குப் பழமையாயும் பின்னைப் புதுமைக்குப் புதுமையாயும் இலங்குகின்றது இன்பத் தமிழ்.

தமிழில் புது இன்பப் புது மது வெள்ளம் பொங்கி வழிந்துகொண்டே இருக்கிறது உலகறிந்த உண்மை. இன்றும் தமிழ் மக்களிடையே தமிழ் ஆர்வமும் தமிழ் அன்பும் பெருகி வருகிறது என்பதை நாம் மறுக்கவில்லை-மறுக்கவும் முடியாது. ஆனால் ஒன்று மாத்திரம் சொல்லுவோம். தமிழின் தரம் குறைந்து கொண்டே வருகிற தென்பதுதான் அது. இதை யாரும் மறுக்கமாட்டார்கள் என்று நம்புகிறோம். ஏனைய எம் மொழிகளையும்விடத் தமிழில் கவிதை வளம் அதிகம். தமிழ்க் கவிதைகளில் சொல்லாற்றல், யானை நடந்து போவது மாதிரி இருக்கும். இன்பச்சுவை அமுதொழுக்கை நிகர்த்திருக்கும். கற்பனைச்சுவை மல்கியிருக்கும். தமிழ்க்கவி மிக மிக உயர்ந்தது. "கவியாக உருவம் எடுக்கும் பொழுது தமிழைப் பார்த்தால் அதன் நுணுக்கமும், நயமும் கிரேக்க மொழிக்கும் இல்லை என்று சொல்லவேண்டும். அப்படிச் சொல்லுவது மிகைகூறும் படாடோபம் அல்ல” என்று டாக்டர் வின்சலோ என்ற அறிஞர் கூறுகின்றார்.

இன்று தமிழ் நாட்டில் ஒரு புதுநோய் பரவி வருகிறது. அதுதான் வசன கவிதை என்பது. யாப்பு இலக்கணம் கைக்குள் அடங்காமற்போய் வசனத்தை ஆசிரியர்கள் கையாண்டால் அது கவிதையாகிவிட முடியாது. இந்த வசன கவிதை முயற்சி தமிழ்க் கவிதை உலகிற்கே இழிவைத் தேடித் தந்துவிடும் என்பதில் ஐயமில்லை. வசனம் வளம் பெற்றது நக்கீரர், நச்சினார்க்கினியர், பரிமேலழகர், சேனாவரையர் போன்ற உரையாசிரியர்களாலேயாம். இவர்களுக்கு முன் உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள் என்ற பகுதியில் தகடூர் யாத்திரை, பெருந் தேவனார் பாரதம் முதலிய நூல்களில் வசனம் காணப்பெறுகின்றது. தமிழில் சாசனக் கல் வெட்டுக்களிலும் வசனமே கையாளப்பட்டு வந்திருக்கின்றது.