பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

19


உளவியல் ஆகியவை கல்வி உளவியலின் பிரிவுகள், மாணவர்களின் பருவகால உளவியல்களுடன் கல்வி உளவியல் பிரிவுகள் இணைந்தும் இசைந்தும் சென்றால்தான் கல்விப் பயணம் சிறப்புற அமையும்!

கல்விக்கு வயது வரம்பு இல்லை. வாழ்க்கை முழுதும் கற்கவேண்டும்; சாகும் வரையிலும் கற்க வேண்டும்; சாகும் பொழுதுகூடப் படித்துக் கொண்டே சாகவேண்டும் என்பது திருக்குறள் கருத்து.

"யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு”

என்பது திருக்குறள். ஆயினும் பருவந்தோறும் வளரும் உணர்வுகள், ஆர்வங்கள், வாழ்க்கையின் வளர்ச்சிகள், மாற்றங்கள் ஆகியவற்றிற்கு ஏற்றவாறு, கற்கும் கல்வி அமைய வேண்டும். நாள்தோறும் வாழ்க்கையை உந்திச் செலுத்தும் சாதனமாகவும் புத்துயிர்ப்பு வழங்கும் வாழ்க்கையை இயக்கும் சாதனமாகவும் அமைவது கல்வி.

கல்வி ஏன் தேவை?

கல்வி என்பது என்ன? கல்வி, ஆன்மாவினிடத்தில் இயல்பாக அளவின்றி இருக்கும் உயர்ந்த ஆற்றல்களைக் கண்டுபிடித்து வெளிக்கொணரும் ஒரு சாதனம். அடுத்து, இந்தப் பரந்த உலகத்தை ஆன்மா அறிந்துகொண்டு அனுபவிக்கத் துணை செய்வது கல்வி. ஆன்மாவின் ஆற்றலையும், ஆன்மாவின் பொறிபுலன்களின் ஆற்றலையும் வளர்த்து வாழும் உலகத்தின் பயன்களை முழுதாக அனுபவித்து ஆன்மா அறிவிலும் ஞானத்திலும் முதிர்ச்சியடையத் துணை செய்வது கல்வி.

கல்வி இல்லையானால் ஆன்மா அறியாமையின்வழி நடந்து அவதிப்படும். ஆன்மாவின் பொறிபுலன்களுக்குப் பயன் இல்லாமல் போய்விடும். கல்வி இல்லையாயின் இந்த