பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/310

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

298

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


படுத்தியும் வைத்திருக்கின்றனர். சிறப்பாகக் காலை நேரத்துக்கு மருதப் பண்ணும், மாலை நேரத்துக்குச் செவ்வழிப் பண்ணும் உரியதாகும். பண்ணிசையின் ஆக்கத்திற்குத் தேவார ஆசிரியர்கள் மூவரும் செய்த தொண்டு மிகவும் போற்றுதற்குரியது. தேவாரத் திருமுறைகளில் பண்கள் பேசப் பெற்றுள்ளன. அதாவது பகற்பண், இராப்பண், பொதுப்பண் என்று இந்தப் பண்களுக்குரிய கட்டளை பேதங்களையும் திருமுறை கண்ட புராணம் எடுத்துச் சொல்லியுள்ளது. கட்டளை என்பது எதைக் குறிக்கும் என்பதுபற்றி மாறுபட்ட கருத்துக்கள் பல உலவு' கின்றன. பெரும்பாலும் கட்டளை என்பது இசையினுடைய கலையைப் பற்றியதாகத்தான் இருக்கவேண்டும் என்று எண்ணுகின்றோம் திருமுறைகண்ட முறைப்படி பண்களையும் அவ்வவற்றிற்குரிய கட்டளைகளையும் பதிகங்களையும் தெளிவுற எழுதி வெளியிடுவது அவசியமாகும்.

நாம் செய்ய வேண்டுவன

தமிழிசை வளர்ச்சியுற நல்ல கீர்த்தனைகள் வேண்டும். அக் கீர்த்தனைகள் பொருட் செறிவும் இசைப் பொருத்தமும் பெற்றிருத்தல் வேண்டும். இத்தகைய கீர்த்தனைகளின் பெருக்கிற்குச் 'சாகித்ய கர்த்தாக்கள்' இசைப் புலமையும் தேர்ச்சியும் பெறவேண்டும். தமிழ்ப் புலவர்களும் இசை துணுக்கங்களைக் கற்று முத்தமிழ் வளர்ச்சிக்குப் பணி செய்யவேண்டும்.

தொகுப்புரை

இசைக்கலை வாழ்க்கையிலே தோய்ந்து விளங்குகின்ற பெருமை படைத்ததென்பதையும், தமிழ் மக்களது வாழ்க்கையில் கருக்குழி முதல் சவக்குழி வரையில் இசை கலந்திருக்கிறது என்பதையும் தமிழ் மக்கள், கலைகள் அனைத்தையும் இறைவழிபாட்டிலேயே ஈடுபடுத்தி மகிழ்ந்தனர் என்பதையும்