பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/312

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

300

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்று பாடி இருக்கிறார். நெல்லூர், காளத்தி முதலிய இடங்களில் கிடைத்த சிற்றரசர்தம் கல்வெட்டுக்களில் இரண்டாம் இராசேந்திரன் பேரரசனாகக் குறிக்கப் பெற்றுள்ளான். இப்படித் தமிழர் ஆட்சியுடன் பரவி இருந்தது, ஒரு காலத்தில், இடைக்காலத்தில் தமிழர்கள் வளமும், உணர்வும் குன்றித் தேய்ந்துகொண்டே வந்தார்கள். ஆதலால் தான் ஆந்திரர்கள், தமிழருக்கே உரிய சென்னைக்கும் ஆசைகாட்டி வீணான உரிமை பாராட்டினர் போலும்! தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நின்று வடவேங்கடம் முதல் தென்குமரி வரையில் உள்ள விரிந்த தமிழகத்தைப் பெறவேண்டும். தமிழர்களது நியாயமான உரிமையை இன்றைய அரசாங்கம் தயங்காது தர வேண்டும்.

5.இலக்கியம்

அரசியலுக்கு இலக்கியத் தொடர்பு உண்டா? அரசியலுக்கல்ல - சமுதாயத்திற்கு அன்றாட வாழ்விற்கு இலக்கியம் தேவையா என்ற நிலைக்கு மக்கள் வந்திருக்கிறார்கள். வீட்டுக்கு வேலி தேவை; ஆனால் வேலியே வீடாகி விடாது-விடக்கூடாது. சமுதாயத்தைக் காப்பாற்றத் திருடாதே என்று அறம் சொல்லுகின்றன; மீறித் திருடினால் பிடிப்பதுதான் அரசியல்.

இன்று நம் நாட்டில் நோக்கும் திசையெல்லாம் அரசியல்தான். நம் நாட்டில் நிறையக் கொடிகளைப் பறக்க விடுகிறார்களே தவிர இலக்கியப் பண்ணைகள் பெருகியிருக்கின்றனவா? எத்தனை எத்தனை கட்சிக் கொடிகள்!

மேலும், இங்கு திரைப்படக் கொட்டகைகள் பெருகிய அளவிற்கு-சிற்றுண்டிசாலை பெருகிய அளவிற்குப் புத்தக சாலைகள் பெருகி இருக்கின்றனவா? இல்லையே. இருக்கின்ற புத்தகசாலைகளிலும் தரமான புத்தகங்களைப் பார்க்கின்றோமா? தரமான புத்தகங்களை மக்கள் படிக்கிறார்களா?