பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/314

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

302

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தடுத்துக் காத்துக்கொள்ள விரும்பினார்கள். அதை யொட்டியே சமயம் சமுதாயத்தை விட்டு விலகியது. "குறை விலாது உயிர்கள் வாழ்க" என்றார் அப்பரடிகள், "நாமர்க்கும் குடியல்லோம்" என்று ஏழாம் நூற்றாண்டிலேயே முதன் முதலாக சுதந்திர முழக்கம் செய்தார் அப்பரடிகள். இன்று இந்தக் கொள்கைகளையெல்லாம் நாம் சமுதாயக் கண்ணோட்டத்தோடு பார்க்கிறோமா? வெறும் பாராயணப் பாட்டாகத்தானே வைத்துக் கொண்டிருக்கிறோம்.

நமது இலக்கிய மரபு அன்பு மரபு; உலக இலக்கியங்களுக்கெல்லாம் தாயாக விளங்கும் தனிப்பெரும் மரபு. இடித்தோ இணக்கியோ, மனித சமுதாயத்தை முன்னோக்கி இழுத்துச் செல்ல எழுந்தவைதாம் நமது இலக்கியங்கள்.

நாடு முழுவதும் இலக்கிய பரம்பரையை - இலக்கியச் சிந்தனைகளை உருவாக்கினால் நிச்சயமாக-எளிதாக தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்கிவிட முடியும். இதற்கு அரசியலின் பெயரால் தனித்தனிக் குழுக்கள் தேவையில்லை. கங்கை கரையிலிருந்து காவிரிக்கரை வரையிலே நமது இலக்கியச் சிந்தனைகள் வளர்ந்துவிட்டால் "எல்லோரும் மனிதர்கள்" என்ற வள்ளுவத்தின் வாழ்க்கை நெறியைப் பரப்பிவிட்டால் எல்லோரும் ஒரே குலமாக வாழமுடியும்.

நம் நாடும் இனமும் வளராமற் போனதற்குக் காரணம் ஒன்றையொன்று அழிக்கும் மனப்பான்மை இருந்ததுதான். எதுவும் எதையும் அழிக்காது; எதுவும் எதனாலும் அழியாது என்ற நம்பிக்கை எல்லா மக்கள் மனத்திலும் வேரூன்ற வேண்டும். மொழியால் மாறுபட்டாலும், மதத்தால் வேறுபட்டாலும் அன்பின் மூலமாக ஒருமைப்பாட்டை உண்டாக்கிவிட முடியும்; தேசிய ஒருமைப்பாடு உயிரினும் மெல்லியது. அதைக் காப்பது நமது பிறப்புரிமை.