பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/317

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

305


இந்த ஒரு நூலால் முடியும் என்பதைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஒருமை மூலமாகத்தான் ஒற்றுமை வரும் என்று நினைத்தால், அது தவறு. மனிதனை நேசிக்கத்தான் வாழ்க்கை இருக்கிறது என்பதை உணரச் செய்துவிட்டால் தேசீய ஒருமைப்பாடு பற்றி கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படுமா? தேசீய ஒருமைப்பாடுதான் நம் உயிர் நிலை. அதைக் காப்பாற்ற வேண்டியது நமது கடமை. இதை நிறைவேற்ற யார் யாருக்கு எந்தெந்த வைத்தியம் செய்ய வேண்டுமோ அந்தந்த வைத்தியம் செய்ய வேண்டும். எல்லோருக்கும் ஒரே மாதிரிப் பத்தியம் என்று எதிர்த்துப் பேசுகிறவர்கள் நாவை அடக்கி விடுவதால் இலட்சியம் நிறைவேறாது; இங்கு இருப்பவர்களுக்குள் அன்பை ஏற்படுத்த வேண்டும்.

ஒருமைப்பாட்டுக்கு இலக்கிய உணர்ச்சியும், இலக்கியச் சிந்தனையும் மிகவும் தேவை.

பாரதியையும், வள்ளுவரையும் இரண்டு கண்களாக இணைத்து நாட்டு மக்களுக்குச் சொல்லவேண்டும்.

சமுதாயத்தின் ஊற்றுக் கண், மொழி, ஒருவருக்கொருவர் அன்பை உண்டு பண்ணவே மொழி இருக்கிறது; மோதிக்கொள்வதற்காக அல்ல. திருக்குறளைத் தேசிய இலக்கியமாக இந்திய சர்க்கார் ஏற்றுக்கொண்டு, அனைவரும் அதன்படி நடக்கச் செய்தால் நிச்சயம் தேசீய ஒருமைப்பாடு ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.

6.தமிழிலக்கியம் காட்டும் நெறி

தமிழ் தன்னேரிலாத தனிமொழி. தொன்மை நலஞ்செறிந்த செம்மொழி. புதுமை நலம் பல பூத்துப் பொலியும் பொதுமொழி. பழமையும் புதுமையும் கலந்து களிநடம் பயிலும் ஒரேமொழி. கடவுட் சார்பு பெற்று, காலத்தொடு படாத கன்னித் தமிழாகக் காட்சியளிக்கும் ஒரு தனிமொழி.