பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/318

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

306

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இன்பத் தமிழில் இலக்கியங்கள் நிறைய உண்டு. தமிழ் வளர்த்த சங்கங்களுக்கு முன்னும் பின்னும் தமிழ்ப் பெருமக்களின் உணர்வுத் திறனிலிருந்து உருவெடுத்த இலக்கியங்கள் பல. தமிழகத்தில் தோன்றிய இலக்கியங்கள் பல கிடைக்கவில்லை. அவ்வப்பொழுது எழுந்த கடல் கோள்களால் பல இலக்கியங்கள் கொள்ளப்பட்டன. தமிழர் பெட்புறப் பேணாத காரணத்தால் கறையான்கள், ஒரு சிலவற்றைச் சுவைகண்டழித்தன. எனினும், நல்லூழின் காரணத்தால் ஒருசில இலக்கியங்கள் எஞ்சியுள்ளன. தமிழ் மொழியில் பல நல்ல இலக்கியங்கள் இருந்தன-இருந்து கொண்டிருக்கின்றன: வளர்ந்து கொண்டுமிருக்கின்றன.

எது இலக்கியம்?

அன்றாட வாழ்க்கை அல்லல் நிறைந்த வாழ்க்கை-துன்பச் சுழல் கவ்விடும் இடும்பையே நிறைந்த வாழ்க்கை இல்வாழ்க்கையில் பல்வேறு சமயங்களில் தளர்வு தலை காட்டும். தளர்வாலும், துன்பத்தின் சூழலாலும், இன்பத்தின் நிலைக்களனாய வாழ்க்கை, வெறுப்பு நிறைந்ததாக மாறிவிடும். வெறுப்புணர்ச்சியின் காரணமாக நேர்மை என்ற நேர்கோட்டிலே, செம்மை நலஞ்சிறந்த செந்நெறியிலே, செல்லவேண்டிய மக்கள் வழிதவறிச் செல்ல நேரிடும். அப்பொழுது, நல்ல நினைவையும்-அறிவையும் உணர்வையும் ஊட்டித் தளர்ச்சியை நீக்கி நேர்மை பொருந்திய நெறியிலே அழைத்துச் செல்லும் திறனுடையனவே நல்ல இலக்கியங்கள். நல்லனவே எண்ணும், புலனழுக்கற்ற அந்தணாளர்களின் உணர்ச்சிகளே நல்ல இலக்கியங்கள். நல்லெண்ணங்களின் தொகுப்பே இலக்கியம் என்று கூறுவர் எமர்சன். மக்களுக்கு நல்லொழுக்கத்தைக் கற்றுக்கொடுத்து வாழ்வாங்கு வாழச் சொல்லிக் கொடுப்பதே நல்ல இலக்கியத்திற்குரிய சான்று. இலட்சியம் நிறைந்த வாழ்க்கை நெறியில் அழைத்துச் செல்லும் ஒப்பற்ற தொண்டைத் திறம்படச் செய்வதே