பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உலகம் ஒர் "இருட்டுக்கண்டமே!" இருளில் நடக்கக் கை விளக்கு துணை செய்வதுபோல ஆன்மாவின் இருளகற்றும் கைவிளக்காகக் கற்ற கல்வியும் அறிவும் துணைசெய்யும். அதனால் வையத்துள் வாழ்வாங்கு வாழக் கல்வி தேவை.

கசடறக் கற்க

"கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக"

என்கிறது திருக்குறள். கல்வி, கற்க வேண்டிய ஒன்று. நாள் தோறும் நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்துக் கற்பது மாணாக்கனின் பழக்கமும் வழக்கமும் ஆகவேண்டும். எத்தகைய நூல்களைத் தேர்ந்தெடுப்பது கற்பதற்கு? “கற்க கசடறக் கற்பவை” என்ற தொடருக்கு ஐயமில்லாமல்-பிழையில்லாமல் கற்பது என்று பொருள் கூறுவது ஏற்புடைத்தன்று. கசடு - குற்றம்: அதாவது ஆன்மாக்களிடத்தில் உள்ள அறியாமை! நான், எனது என்னும் செருக்கு, அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் ஆகிய கசடுகள் நீக்கத்திற்குரிய நூல்களைத் தேர்ந்தெடுத்துக் கற்கவேண்டும் என்பது பொருள். மனிதனை ஒழுக்கமுடையவனாகவும் நல்லவனாகவும் வாழும் முறையைக் கற்றுக் கொடுக்கவேண்டும் கல்வியின் நோக்கம் பட்டதாரிகளை உருவாக்குவதன்று. மனிதனை உருவாக்கவேண்டும். கல்வியின் நோக்கம் ஒழுக்கம் என்ப தறிதல் தேவை. அடிப்படைக் கல்வியிலிருந்து உயர்நிலைக் கல்வி வரை, குறிப்பாகப் பல்கலைக்கழகங்கள் வழங்கும் கல்வி வரை "மனித இன நலக் கோட்பாடு" கற்றுத் தருதல் வேண்டும். அதோடு சகிப்புத் தன்மை, உண்மையைத் தேடுவதில் ஆர்வம், முன்னேறிச் செல்லும் உணர்வுப் போக்கு ஆகியவற்றில் மாணவர்களுக்குத் தேர்ந்த பயிற்சி தருதல் வேண்டும்.