பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/325

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

313


ஆம்! விளைநிலம் உழுது, எருவைக்கொட்டிக் கொடுத்து, நல்ல உணவுப் பொருளை-விளைவித்துக் கொடுப்பது எருதுதானே? எருதின் உழைப்பால் உலகம் உண்ணுகின்ற உணவைப் பெறுகிறது. இங்ஙனம் உலகுக்கு உணவு கொடுக்கின்ற எருது, மக்களால் கழிக்கப்பெற்ற-பயனற்ற வைக்கோலைத் தின்று வாழ்கின்றது. அந்த வைக்கோலைத் தின்பதுங்கூட மறுபடியும் உணவு விளைவுத் தொழிலில் ஈடுபட்டு உலகத்தவருக்கு உதவி செய்ய வேண்டுமே என்ற எண்ணத்தினால்தான். இதனைப் புலவர் எண்ணுகின்றார்-பாடுகின்றார்.

"உழுத நோன்பக டழிதின் றாங்கு
நல்லமிழ் தாகநீ நயந்துண்ணு நறவே”

என்று உளங் குளிரப் பாராட்டுகின்றார்.

இந்தப் பாட்டினைப் படிக்கும்போது தமிழ்நாட்டுத் திருக்கோயில்களின் நினைவு நமக்கு வரும். அங்கு நந்திக்குத் (காளை வடிவம்) தனிச்சிறப்பு வழங்கப்பட்டிருப்பதன் உண்மை புலனாகும்.

சமய வாழ்க்கை பிறர் நலம் பேணுகின்ற வாழ்க்கை வெறுப்புணர்ச்சி இல்லாத-பூசலற்ற நிலையிலே வாழச் சொல்லியது சமயம். ஆண்டவனை வணங்கப் போகும் ஆலயம் சொல்லித் தரும் பாடம் 'பிறருக்காக வாழ்க' என்பதே ஆம். திருக்கோயிலிலே முதலிலே எருதுதான் காட்சியளிக்கிறது. அந்தக் காட்சி சொல்லும் அறவுரை தலையாய அறவுரை "ஏ, மனிதனே! நீ மனிதன் என்று மார் தட்டாதே. பகுத்தறிவாளன் என்று பறை சாற்றாதே; பெருமிதங் கொள்ளாதே! இந்த எருதினுடைய-பிறர் நலங் கருதுகின்ற, உழைக்கின்ற, உள்ளத்தை முதலில் பெறுவாயாக அந்த உள்ளம் உனக்கு வந்து விட்டதானால் சமய வாழ்க்கையில்இறைவனோடு தொடர்பு கொள்ளும் இன்ப வாழ்க்கையில் நுழைகின்றாய்!” என்று திருக்கோயில் சாற்றுகின்றது.

கு.XV.21.