பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/326

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

314

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அதனாலன்றோ சமயப் பெருமக்கள், எருதையே ஊர்தியாகவும், கொடியாகவும் அமைத்தனர்.

இங்ஙணம் பிறர் நலமே சொன்ன சமயத்திலும் எங்ஙனமோ சாதிச் சண்டைகள் நுழைந்துவிட்டன! உயர்வு தாழ்வு மனப்பான்மைகள் உட்புகுந்து விட்டன!! தன்னலப் பேராசையும்கூடக் குடியேறிவிட்டது!! இந்த உணர்ச்சிகள் சமய வாழ்க்கைக்குப் புறம்பானவை. மனித நாகரிகத்திற்கு நஞ்சு. இவையனைத்தும் அழிந்தொழியப் பெறுதல் வேண்டும். பெருஞ்சாத்தனார் காட்டுகின்ற பேரறநெறியிலே, தமிழ்ப் பெருமக்கள் கண்ட சமய வாழ்க்கை வற்புறுத்துகின்ற, "பிறர் நலம் பேணுகின்ற பேரறம்” மலர்க! வாழ்க!! வளர்க!!

9. ஒழுக்க நூல்

யாரும் எதையும் எதற்காகவும் அழிக்க வேண்டியதில்லை. கொஞ்சம் மாற்றிக்கொள்ள முடியுமா என்று பார்க்கலாம்; உலகில் தோன்றிய எதுவும் அழிந்துபடுவதில்லை; ஒன்று பிறிதொன்றாக வடிவெடுக்கும் என்பதுதான் உண்மை; குப்பை உரமாகிறது; விதை மரமாகிறது. இதனால் குப்பையும், விதையும் அழிந்துபட்டதாகவா கருதுவது? எனவே, தமிழுக்கும் தமிழருக்கும் இப்போது ஏற்பட்டிருக்கிற அச்சம் தேவையில்லை.

மொழி வெறுமனே ஒருவர் கருத்தை மற்றவர்க்குத் தெரிவிக்க உதவும் ஒரு கருவிதான் என்று கூறுகின்ற கூற்றை நாம் ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை.

காக்கை கரையவில்லையா? கன்று கதறவில்லையா? குயில் கூவவில்லையா? ஆந்தை அலறவில்லையா? இவற்றிடையே மொழி இல்லை என்பது உண்மைதான். ஆனால் அடையாளம் தெரிந்துகொள்ள முடியாமல் தவிக்கிறோமா? இல்லையே. எனவே மொழியோடு, மொழியை ஒட்டிய நாகரிகம் இல்லையானால் மொழியே