பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/327

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

315


கூட வேண்டியதில்லை என்று கூறுவதில் ஏதும் தவறில்லை. மொழி ஊற்றுக்கண் போன்றது; மனித சமுதாயத்தின்-சமுதாய நாகரிகத்தின் ஊற்றுக்கண், அந்த ஊற்றுக்கண் அடைபட்டு விட்டால் மனித சமுதாயம் காட்டுமிராண்டியாகிவிடும்; செயலற்றதாகிவிடும் - வேட்கை தணிக்கும் நீரில்லாத ஊருணியாகிவிடும்.

வாழும் சமுதாயத்திற்குத் தாய்மொழி மிகமிக இன்றியமையாதது; தாயில்லாத பிள்ளை சவலை ஆவது போலவே, தாய்மொழி இல்லாத சமுதாயம் சவலையாகிப் போகும்.

பொதுவாக எத்தனை மொழிகளை வேண்டு மானாலும் கற்றுக்கொள்ளலாம். அதில் தவறில்லை குழந்தைக்குத் தாய்ப்பால் வலு ஊட்டும்; சிறந்த உணவும்கூட எனினும் புட்டிப்பால் அத்துணைச் சிறப்புடையதா? இல்லையே அதுபோலவே, தாய்மொழியைத் தாய்ப்பால் என்றால், பிறமொழிகளைப் புட்டிப்பால் என்று குறிப்பிடலாம்.

உலக நூல்கள் - அறிவியல் நூல்கள் யாவற்றையும் கற்கத்தான் வேண்டும்; கற்கவில்லையாயினும், செவிவழிச் செய்திகளாகக் கேட்டறியலாம். இதைத்தான் கற்றிலனாயினும் கேட்க என்றார் வள்ளுவப் பெருந்தகை. இவ்வழிப் பார்க்கும்போது, கல்லாதவர்களும் கேட்டுப் புரிந்துகொள்ள - அதைப்பற்றி எண்ண சிந்திக்கத் தாய்மொழியைப்போல் வேறு எந்த மொழி பயன்பட முடியும்?

இன்றையச் சமுதாயச் சூழலில் எத்துணை எத்துணையோ வேறுபாடுகள் - வேற்றுமைகள். இருப்பினும், தமிழை - தமிழின் வாழ்வை, தமிழின் நலத்தை மையப்புள்ளியாக வைத்துக்கொண்டு நாம் வேறுபாடுகளை மறந்து ஒருமைப்பாட்டுணர்வால் ஒன்றுபட்டு வாழமுற்பட வேண்டும். வேறுபாடுகளுக்கு இடங்கொடுத்து, அவற்றால்