பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/330

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

318

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இன்னொருவர் துன்பங்கண்டு இரங்கி கண்ணிர் விடுவதுதான் அன்பு என்கிறார்.

"அன்பிற்கு முண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்கண்
புன்கணிர் பூசல் தரும்"

என்றார். எவ்வளவு அருமையான விளக்கம், தென்னையும் வாழையும் மற்றவர்களுக்கென்றே வாழ்வதுபோல மனிதனும் மற்றவர்களுக்கென்றே வாழ்வானானால் பலர் அவனுக்கு உறவாக வருவார்கள்.

உலகின் தொண்டின் நெறி மறைந்திருந்த காலத்தில்-தொண்டின் நெறியை மக்கள் மறந்திருந்த காலத்தில் தொண்டின் நெறியை நினைவுபடுத்த சேக்கிழார் பெருமான் அவதரித்தார். வடவர்கள் நாகரிகம் தமிழகத்தில் கால்கோள் செய்துவிடுமோ என்று பலர் அச்சமுற்று வாழ்ந்த காலத்தில் வடவர் நாகரிகம் தமிழகத்தில் பரவாமல் தடுத்துக் காக்கக் கம்பர் தோன்றினார். அதுபோல, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒழுக்கத்திற்கு இழுக்கு நேர்ந்த காலத்தில் ஒழுக்கத்தை நிலைநிறுத்திப் புதிய தெம்பை ஊட்ட வள்ளுவர் தோன்றினார்.

நேற்றிருந்த ஒரே பெரும் ஒழுக்க நூல் திருக்குறள். இன்றிருக்கும் ஒரே பெரிய ஒழுக்கநூல் அதுதான். நாளை, ஏன் இனி வருங்காலத்தில் இருக்கப்போகும் ஒரே பெரிய ஒழுக்க நூலும் அதுதான். எனவே, வள்ளுவத்தை வாழ்க்கை நூலாக நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஒரு சிந்தனைக் குழு அமைத்து வள்ளுவத்தை-வள்ளுவத்தில் உள்ள மனோ தத்துவக் கருத்துக்களை ஆராய வேண்டும். வள்ளுவர் காலத்திற்குமுன் அடித்தவன் புகழே பேசப் பெற்றது. இன்றோ அணைத்தவன் புகழ்தான் பாராட்டப் பெறுகிறது.

இன்று பழமைக்கும் புதுமைக்கும் இடையே ஒரு பெரும் போராட்டம் நிகழ்ந்து வருகிறது. பழையன யாவும் பழையனவே என்பார் ஒரு சாரார். புதுமை யாவுமே