பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/332

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

320

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இன்றுள்ள உறவு அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் உள்ள உறவைப்போல் இருக்கிறது. நமது வாழ்க்கைப் போக்கில் வள்ளுவத்தின் நிழல் படியவில்லை. மனிதர்களின் வாழ்க்கையை அகத்தாலும் புறத்தாலும் வளப்படுத்துவதே கல்வி, சராசரி மனிதனால் நடைபயிலக்கூடிய அறநெறியே கூறினார் அவர். வாழ்க்கை முறைபற்றிச் சமுதாயத்தின் சாதாரண படியில் உள்ள சராசரி மனிதனுக்குச் சொல்ல விரும்பிய அளவில் சுருக்கமாக-தனித் தனியே எளிய முறையில் கூறினார்.

வாழ்க்கையில் பல்வேறு அனுபவங்களையும் அவர் பேசுகின்றார். அனைத்தும் அனுபவித்த ஒருவர் கூறுவது போலவே பேசுகிறார். திருக்குறளே அனுபவ விளக்கமாகக் காட்சியளிக்கிறார். திருவள்ளுவர் சமுதாயத்தின் பல்வேறிடங்கட்கும் சென்று பல்வேறு தரப்பினரையும் பார்த்து - நாட்டில் பலர் பேசிய - வழக்கில் இருந்த பல்வேறு செய்திகளையும் கருத்துக்களையும்கூட நினைவில் வைத்துக் கொண்டு நூல் செய்திருக்கிறார். மிகச் சிறந்த பொற்கொல்லர் போல, வள்ளுவர் சொற்களுக்கு மெருகேற்றியிருக்கிறார். அவர் ஒரு கைவந்த சொல்தச்சராகவே விளங்குகிறார்.

இன்று, அள்ளித் தெளித்ததெல்லாம் கோலம் என்பது போல, பலர் வாழ்க்கை நடத்துகின்றனர். வரலாற்றைப் படிப்பதிலே நாம் அவ்வளவு அக்கறை காட்ட வேண்டியதில்லை. நாம் ஒரு புதிய வரலாற்றை உருவாக்க முயற்சிக்க வேண்டும். நமக்கு முன் வாழ்ந்தவர்கள் செய்த தவறுகளை நாமும் செய்து வீழ்ச்சியடையக் கூடாது.

தொடக்கத்தில் மனிதன் கண்களால்தான் பேசியிருக்கிறான். உள் உணர்வுகளுக்குத் தக்கபடி கண் ஆடும். மனிதன் கண்களைக் கட்டுப்படுத்தி வாழ முடியாது. இதனால்தான், இறைத்தோற்றத்தில்கூட அப்பரடிகள் முதன் முதலில் குனிந்த புருவத்தைப்பற்றிப் பேசுகிறார்.