பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/333

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

321



வள்ளுவர் காலத்தில் நம் மக்களில் பலர் எண்ண - சிந்திக்க விரும்பாமலேயே வாழ்ந்தார்கள். எனவே வள்ளுவர், எண்ணவேண்டும் - சிந்திக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். எண்ணிச் சிந்தித்துச் செயற்படுவதன் மூலம் உலகத்தை வெற்றி பெறமுடியும்.

புறத்துறையில் புரட்சி செய்தவர்கள் ஏராளம்; ஆனால் அகப்புரட்சி செய்தவர்கள் மிகச் சிலரேயாவர். அந்த அகப் புரட்சியும்கூட ஆற்றொழுக்காக இல்லாமல் இடையிடையே தடைப்பட்டுத் தளர்வுற்று வந்திருக்கிறது. மனிதன் அக வளர்ச்சியில் தேய்ந்து கொண்டே வந்திருக்கிறான்: மனிதன் வாழத்தானே புதிய புதிய சாதனங்கள் எல்லாம் என்பதை அவன் எண்ணிப் பார்க்கக்கூட மறந்துவிட்டான்.

குடிப்பிறப்புச் சிறப்பு மனிதனுக்கு இன்றியமையாதது. திருவள்ளுவர், அப்பரடிகள் ஆகியோரின் குடிப்பிறப்புச் சிறப்பு இன்று நம்மிடம் இருக்கிறதா?

'நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்'

என்று வீட்டுக்குள்ளே அடங்கிக் கிடப்பவனைப் பார்த்து - குடும்ப வாழ்க்கையின் செழுமையில்லாதிருப்பவனைப் பார்த்துப் பேசினார்.

'உலகத்தோடு ஒத்து வாழு; ஒதுங்கி வாழாதே' என்று பேசுகிறார் திருவள்ளுவர். நீ சென்று குடியேறிய நாட்டை உன் நாடாக எண்ணிப் போற்று; அதனை உன் நாடாகவே ஆக்கிக்கொள். அந்நாட்டை உன் நாடாக ஆக்கிக்கொள்ள அந்நாட்டு மொழிகளையெல்லாம் கற்றுக்கொள் என்கிறார். உலகத்தை உன்னிடத்தே இழுக்க முயற்சிக்காதே. உலகம் தங்கும் இடத்தில் நீ தங்கிவிடு என்கிறார். வள்ளுவம் அருமையானதொரு வாழ்க்கை இலக்கியம்.