பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வழங்குபவையாக விளங்குகின்றன. பண்டைய வரலாற்றில் கல்வி வழங்கிய கழகங்கள்-சங்கங்கள் காசி, நாளந்தா, காஞ்சி, மதுரை போன்ற இடங்களில் அமைந்திருந்தன. காலப் போக்கில் கழகங்கள் பல, கல்வி கற்பிக்கும் பணியைவிட ஆய்வுப் பணியை மிகுதியும் மேற்கொண்டுவிட்டன! பண்டையக் கல்வி முறையில் ஆசிரியர்-மாணாக்கர்களிடையே நல்ல ஆக்கப்பூர்வமான உறவு இருந்தது. இந்த உறவு தரமான கல்வியைப் பெறுவதற்குத் துணைசெய்தது. பண்டைக் காலத்தில் ஆசிரியர்கள், மாணாக்கர்களுக்குக் கல்வி கொடுத்தார்கள் என்பதைவிட மாணாக்கர்களுடைய புலன்களை உழுது அவர்களிடத்தில் சில அறிவு வித்துக்களை விதைத்தார்கள்; சிறந்த குடிமக்களாக உருவாக்கினார்கள் என்று கூறலாம்.

ஆசிரியர் தம்முடைய கற்பிக்கும் திறனால் மட்டுமன்றி அவர்தம் நெறிசார்ந்த வாழ்க்கையாலும் மாணாக்கனுக்குக் கல்வி கற்பிக்கவேண்டும், என்பதையும் அறிக! அன்று ஆசிரியர் பக்கம் உயர்ந்திருந்தது. ஆசிரியர்களிடம் மாணாக்கர்கள் பணிவாக நடந்துகொண்டனர். "உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது" கற்றனர். அன்று கல்வி, ஆசிரியர் வழங்கும் கொடையாகவே இருந்தது! அன்று கல்வி வழங்கும் ஆசிரியர் பணி ஒரு சமூகப் பணியாக இருந்தது. இன்று ஆசிரியர்களுக்குத் தாம் செய்வது தொண்டு என்ற நினைவுகூட இல்லை! தொழிலாக மாறிவிட்டது! மாணவர்கள் ஆசிரியர்களிடம் போதிய மதிப்புணர்வின்றிக் கற்கிறார்கள்; பழகுகிறார்கள். பண்டு இருந்தது போல ஆசிரியர்-மாணாக்கர் உறவு இருப்பதாகத் தெரியவில்லை. கல்வி, ஆசிரியர்-மாணாக்கர் உறவு என்ற அடிப்படை, கல்வித் தாகம் என்றெல்லாம் இன்று காண இயலவில்லை.

சென்ற காலக் கல்வி முறையில் பெரும்பாலும் செய்யுளே இருந்தது. பெரும்பாலோர் இலக்கியமும், ஒரு சிலரே கணிதம், வானசாத்திரம் முதலியன கற்றனர். எல்லாக்