பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/340

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

328

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



குழந்தைகள் மட்டும் கற்றால் போதாது. இன்று வாழும் “வளர்ந்தவர்"களுக்கும் கூடக் கருத்துப் புரட்சி தேவைப்படுகிறது. அடிமைக்கால உணர்வுகள், ஆதிக்க எண்ணங்கள் தன்னலநாட்டம் இவற்றிலிருந்து நம்மிற் பலர் இன்னும் விடுதலை பெறவில்லை. வளர்ந்துவரும் சமுதாயத்திற்கு ஏற்றவாறு இணைந்துவாழ நாம் அனைவருமே நம்மைத் தகுதிப்படுத்திக் கொள்ளவேண்டியிருக்கிறது. ஆதலால் கிராமத்தில் வாழும் நெறிகாட்ட "வள்ளுவர்" எத்துறையிலும் எப்பொழுதும் எதிலும் "அஹிம்சை" என்ற காந்தீயத் தத்துவம் ஆகியவற்றைப்பற்றிக் கேட்க-சிந்திக்க வாய்ப்புக்களை உண்டாக்கவேண்டும்.

சுதந்திரத்திற்கு முன்னர் இந்த நாட்டில் வாழ்ந்த மக்களின் சராசரி வயது சற்றேறக்குறைய 26 தான். வேத மந்திரங்கள் முழங்க, ஜாதகம் கணித்துப் புரோகிதர்களால் "நூறாண்டு வாழ்க" என்று வாழ்த்தப் பெற்றவனும்கூட 26 வயதில்தான் செத்தான். ஆனால் அவன் கவலைப்படவில்லை. வழக்கம்போல விதி முடிந்தது என்று நினைத்து அமர்ந்திருப்பான். அவனுக்குத் தெரியுமா நாம் சுகாதாரக் குறைவாக வாழ்கிறோம் என்று? கங்கையும் காவிரியும் அவனுடைய தத்துவத்தின்படி தீர்த்தங்கள் தாம். ஆனால் ஆற்றின் கரையோரங்களையே அவன் மலங்கழிக்கும் இடமாகக் கொண்டு மாசுபடுத்துவதைப்பற்றி அவன் எண்ணிப் பார்த்ததில்லை. காலரா, பிளேக் வந்தால் காளியைக் கும்பிடுவான். ஐயகோ! பாவம் சுதந்திரத்திற்குப் பிறகு, காலரா, பிளேக் முதலியன எங்கோ ஓடி ஒளிந்துவிட்டன. ஊராட்சி மன்றங்கள் கிராமத்தின் சுகாதாரத்தைப் பேணுவதில் கண்ணுங் கருத்துமாக இருத்தல் வேண்டும். நோயற்ற வாழ்க்கையும், நிறைந்த வாழ்நாளும் போற்றுதற்குரியன. அதனால், வீட்டையும், வீதியையும் தூய்மையாக வைத்துக் கொள்ள கிராம மக்களைப் பழக்குதல்வேண்டும். அதனாலன்றோ பாரதி,