பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/341

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

329


"சந்தித் தெருப்பெருக்கும்
சாத்திரம் கற்போம்"

என்றான். மேலும் வாழ்க்கைக்குத் தேவையான-சத்துள்ள இயற்கை உணவுகளை நமது கிராம மக்கள் எண்ணிப் பார்த்து உண்பதில்லை. வெறும் அரிசிச் சோறு, மனித வாழ்க்கைக்கே மாபெரும் பகையான புளி, மிளகாய் இவற்றில் மூழ்குகிறார்கள். ஆங்கிலேயன் அதிலும் கெட்டிக்காரன் ஆனான். உடலுக்கு இதந்தரும் நம்முடைய மிளகை வாங்கிக்கொண்டு, எரியூட்டும் மிளகாய் தந்தான். நாமோ மிளகாய் சட்னி அபாரம் என்போம்! பொருந்தா உணவுப் பழக்கத்தைத் தவிர்க்க மக்கட்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். கைக்குத்தலரிசி, நல்ல காய்கறிகள், பால், தயிர் இவைகளை உண்டு உடல் நலத்தோடு உங்கள் கிராமத்து மக்கள் வாழும்படி செய்ய வேண்டும்.

கிராம மக்கள் நிலையான பொருள் வளமும் சீரான வாழ்வும்பெற ஊராட்சி மன்றங்கள் ஊக்கமூட்டி வழி நடத்தவேண்டும்.

கிராமச் சமுதாயத்தில் பெரும்பான்மையோராக இருக்கும் விவசாயிகள் துணைத் தொழில் இன்றிப் போதிய வருவாய் பெறமுடியாது. ஆதலால் ஜப்பான் தேசத்தைப் போல, கிராமத்தின் ஒவ்வொரு வீடும் தொழிலகங்களாக வளர்ந்து காட்சியளிக்க வேண்டும். மேலும் வேளாண்மைத் துறையிலும் புதிய வழித்துறைகளைக் கையாண்டு திருந்திய முறையில் சாகுபடி செய்து, உயர்ந்த அளவு விளைச்சலைக் காணத் தூண்டவேண்டும். கிராமத்தின் தேவைகள் அனைத்தையும் அந்தக் கிராமமே உற்பத்தி செய்யும் அளவிற்குக் கிராமம் வளர்ச்சியடைய வேண்டும். தன்னிறைவு இல்லாத கிராமத்தின் செல்வம் நகர்வாழ் மக்களால் சூறையாடப்படும். ஆதலால் ஊராட்சி மன்றங்களால் தமது கிராமத்திற்கேற்றவாறு திட்டங்களைக் கண்டு செயல்படுத்தி கு.XV.22