பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/343

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

331


என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஆதலால் ஊராட்சி மன்றங்களில் பொறுப்பேற்றிருக்கின்ற நாம் நல்லெண்ணத்திற்கும், நம்பிக்கைக்கும் உரிய குடியாட்சி முறையை உருவாக்க முயற்சிக்க வேண்டும்.

11. வள்ளுவர் வழி

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்கள் தோன்றி வளர்ந்து வாழ்ந்து வருகின்றார்கள். ஐந்து வயதுப் பையனுக்கும் ஐம்பது வயது முதியவருக்கும் வித்தியாசம் இருக்கிறது. ஐந்து வயதான சமுதாயத்திற்கும் 50 வயதான சமுதாயத்திற்கும் வேறுபாடு காணப்பெறுகிறது. உலகில் எந்த விலங்கினங்களுக்கும் இல்லாத பெருஞ்சிறப்பு, பெருமை மனித சமுதாயத்திற்கு உண்டு. காரணம் மனித சமுதாயத்திற்கு வரலாறு இருக்கிறது. புலிக்கும் புறாவுக்கும், காக்கைக்கும் கரடிக்கும் குருவிக்கும் கோட்டானுக்கும் வரலாறு இல்லை.

மனிதகுல வரலாற்று மையமாக லெளகீக-உலகாயத எண்ணங்கள்தாம் உணர்ச்சி பெறுகின்றன என்னைப் பொறுத்த வரையில் உணர்ச்சிகளை உண்டாக்குவதற்குக் கருத்துப் புரட்சியே சரியான சாதனம், கருவி என்று கருதுகின்றேன். கருத்துப் புரட்சிதான் மனித வாழ்க்கையின் கேந்திரமாக மையமாக இருப்பது. சில சமயங்களில் கருத்தின் பேரால் அந்தக் கருத்தைச் சொன்ன ஆட்கள் பெருமை பெறுவார்கள்; இன்னும் சில சமயங்களில் ஆட்களின் பேரால் அந்த ஆட்கள் சொன்ன கருத்துச் சிறப்பு பெறும். எனினும், எப்போதுமே மையமாக ஆட்சி பெறுவது கருத்துதான்.

நம் நாட்டைப் பொறுத்த வரையில் கருத்தை மறந்து விட்டு ஆளை விமர்சிப்பது, ஆளுக்குப் பெருமை செய்வது ஒருவகை. ஆளை மறந்துவிட்டுக் கருத்தை விமரிசிப்பது, கருத்துக்குச் சிறப்புக் கொடுப்பது இன்னொருவகை. ஆள்