பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/345

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

333


விரும்பியது. எனவேதான் அது, "பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்களுக்கும்” என்று பேசுகின்றது.

சாதீய முறைக்குச் சமயம் ஆதரவு தரவில்லை. "ஒன்றே குலம்" என்பது திருமந்திரம், "சாதிகுலம் பிறப்பென்னும் சுழிபட்டுத் தடுமாறும் ஆதமிலி நாயகனை" என்று பேசுகிறது மாணிக்கவாசகம். "சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்” என்கிறது அப்பர் தேவாரம். சமய ரீதியாகச் சாதிகள் உற்பத்தியாக வில்லை-சாதீய முறைக்குச் சமயம் ஆதரவு தரவில்லை என்பதற்கு இதைவிட என்ன வேண்டும்.

சாதீய முறை முதலாளித்துவ முறை. முதலாளித் துவவாதிகள் தங்கள் சுரண்டலுக்கும் சுகபோகங்களுக்கும் ஆபத்து ஏற்பட்டு விடாமல் தடுத்துக் காத்துக் கொள்ளவே சாதீய முறைகளை உருவாக்கி அதற்கு ஆதரவும் கொடுத்து வருகின்றார்கள். சாதீய முறையை உருவாக்கிய அந்த முதலாளித்துவ சுரண்டல்காரர்கள் தங்கள் கொள்கையை உறுதிப்படுத்தச் சமயத்தை-மதத்தைத் துணைக்கழைத்துக் கொண்டார்கள். மன்னன் ஆணை என்றால் ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறவர்களும் மகேசுவரன் கட்டளை என்றால் மறுக்காமல் ஒத்துக்கொள்வார்கள். இதை வைத்தே முதலாளித்துவ வாதிகள் சமயத்திற்கும் சாதீய முறைக்கும் முடிச்சு போட்டார்கள். அவ்வளவுதான். எனவே, சாதிய முறை நமது சமயத்திற்கு முற்றிலும் முரண்பட்டது.

மனித குலத்தை ஒருகுலமாக்குவதுதான் வள்ளுவத்தின் தலையாய கொள்கை. மனிதனை மனிதன் அடித்துப் பிடித்துச் சுரண்டி வாழக்கூடாது; மனிதனை மனிதன் மதிக்க வேண்டும் என்ற கொள்கை வள்ளுவத்தில் வலியுறுத்தப் பெறுகிறது.

அன்பு அன்பு என்று நாம் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பேசி வருகின்றோம். எனினும் அன்பைப்