பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/347

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

335


அவரவர் தலையெழுத்து என்பது சரியானதல்ல. அது பழைய பத்தாம் பசலிக்கொள்கை. அந்தப் பழையக் கொள்கையை நாம் விட்டொழிக்க வேண்டும்.

"தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்"

என்றுதான் வள்ளுவம் பேசுகின்றது. நமது மதத்தைப் பொறுத்தவரையில், "மனிதன் முயற்சி செய்யவேண்டும்-உழைக்க வேண்டும்” என்றுதான் வற்புறுத்துகிறது. யாரும் யாரையும் சுரண்டி வாழ்வதை மதம் அனுமதிக்கவில்லை.

இன்று, “போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து. உள்ளதைக்கொண்டே திருப்தியாக இரு" என்ற பழமொழிகள் மக்களின் ஆசைகளையும், முயற்சிகளையும் அருகச் செய்வனவாக உள்ளன. பலரிடம் ஆசையும் இல்லைஆவல் நிறைந்த வாழ்க்கையுமில்லை. ஆசைப்படாதே என்றால் இன்னொருத்தருடைய சொத்துக்கும் ஆசைப் படாதே என்பதுதான் பொருளே தவிர, நீ வாழ ஆசைப் படாதே-உன் வாழ்வில் வளமை கூட்ட விரும்பாதே என்பது கருத்தல்ல. ஏழைகளின் வாழ்வை உறிஞ்சிச் சுரண்டி வாழும் ஒரு பணக்காரனை - சுரண்டல்காரனைப் பார்த்து இன்னும் மற்றவர் வாழ்வை-வளத்தைச் சுரண்டி வாழ ஆசைப்படாதே, சுரண்டியது போதும் என்று திருப்தியோடு இரு என்பதாக மற்றவர் கூறியதுதான். ஆனால் இன்று நைந்து நலிவுற்று, வாழுகின்ற பல்லாயிரக்கணக்கான ஏழை மக்களின் ஆசையை ஒடுக்கி, அவர்களின் முயற்சியை ஒழித்து, தங்கள் சுரண்டல் தொழிலை தொடர்ந்து நடத்திவர-தங்களைப் பாதுகாத்துக்கொள்ளப் பயன்படுத்தும் பழமொழியாக ஆகிவிட்டது. "போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து" என்பது. அப்பாவியான ஏழையும் இதையே நம்பிக்கொண்டு, "நமக்குக் கிடைத்திருப்பது போதும்" என்று முயற்சியின்றியே வாழத்தலைப்பட்டு விட்டான்.